நாடு முழுவதும் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. கரோனாவின் தாக்கம் இந்தியாவில் பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று காலை காணொலி மூலமாக நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) இரவு 9 மணிக்கு பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் அகல் விளக்கேற்றி, கரோனாவால் இருளில் முழ்கியுள்ள இந்தியாவை வெளிச்சத்திற்குக் கொண்டு வாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பிலிருந்து ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. அகல் விளக்கு ஏற்றும்படி கூறிய பிரதமரின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம், தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது, “ஊரடங்கு உத்தரவால் தினக்கூலி வேலை செய்பவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க பொருளாதார ரீதியிலான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு, விளக்கேற்றி வைத்து கரோனா வைரசை ஒன்றிணைந்து எதிர்கொள்ளுவோம் என்று கூறியபோது, அனைவருக்கும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.