புவனனேஸ்வர் (ஒடிசா): இண்டேன் எரிவாயு சிலிண்டர்கள் பதிவு செய்யவும், புதிய இணைப்புகளைப் பெறவும் மிஸ்டு கால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவை காணொலிக் காட்சி வாயிலாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். 84549 55555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் எரிவாயு சிலிண்டர்கள் பதிவு செய்யப்படும்.
இந்நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர், ‘எரிவாயு சிலிண்டர் பயன்பாடு என்பது 2014ஆம் ஆண்டு 55.9 விழுக்காடாக இருந்தது. ஆனால், தற்போது 99 விழுக்காடு என்ற அளவை எட்டியுள்ளது எனலாம். தாமதமின்றி அவை கிடைக்க வேண்டும் என்பதற்காக மிஸ்டு கால் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா, இயக்குநர் (மார்க்கெட்டிங்) குர்மீத்சிங், தமிழ்நாடு- புதுச்சேரி செயல் இயக்குநர் மற்றும் மாநில தலைவர் ஜெயதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.