தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒற்றை இலக்கத்தில் கரோனா பாதிப்பு; ஐநா பாராட்டு - உலகிற்கு ரோல் மாடலான 'தாராவி'! - தாராவி ஐநா தலைவர் பாராட்டு

கரோனாவை வீழ்த்த முடியாமல் வல்லரசு நாடுகளே திணறிக்கொண்டிருக்கையில், ஒரு தடுப்பு மருந்தில்லாமல், ஒரு தடுப்பூசி இல்லாமல் கரோனாவிடம் 'நிக்கல் நிக்கல் ஜல்தேரே' (கிளம்பு கிளம்பு) என்று கூறியுள்ளது, தாராவி எனும் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி. இதனைச் சாத்தியப்படுத்திய மும்பை மாநகராட்சிக்கும் தாராவி மக்களுக்கும் ஐநா பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறது; மாநில முதலமைச்சரும் பாராட்டியுள்ளார்.

Dharavi emerges as a 'global role model
Dharavi emerges as a 'global role model

By

Published : Jul 12, 2020, 10:38 AM IST

Updated : Jul 12, 2020, 10:46 AM IST

உலக நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கும் கரோனா வைரஸ், ஒரு சில பகுதிகளில் தன் வாலைச் சுருட்டிக் கொண்டுள்ளது. அதில் ஒன்றுதான், ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவி. அங்கு மேற்கொண்ட தீவிர கரோனா தடுப்புப் பணிகளால் தற்போது நாளொன்றுக்கு தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணாக மாறியுள்ளது.

2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் தாராவியில் சுமார் 8 லட்சம் மக்கள் வசித்துவருகின்றனர். ஒருவர் மட்டுமே நுழையக்கூடிய அளவிலான மிகக் குறுகலான சந்துகள், மிக நெருக்கமான வீடுகள், 5,6 பேருக்கு ஒரே பொதுக் கழிப்பறை என மும்பை மாநகரின் சாயலுக்குச் சிறிதும் ஒத்துப்போகாத, முற்றிலும் வேறுபட்ட பகுதியாக தாராவி இருக்கிறது.

உலகளவில் கரோனாவைக் கட்டுப்படுத்திய முன்னோடி நாடாக திகழ்ந்த நியூசிலாந்தில்கூட, வீடுகள் பரவலாக இருந்ததால் கரோனா தொற்றை வீழ்த்த முடிந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை கூறியிருந்தது. ஆனால், தாராவியின் நிலைமையோ வேறு. பின் எப்படி தாராவியில் கரோனா கட்டுக்குள் வந்தது?

அதற்குக் காரணம் 4டி என்ற நடைமுறைதான். அது என்ன 4டி?

Tracing - தொற்று பரவிய வழியைக் கண்டறிதல்

Testing - பரிசோதனை செய்வது

Tracking - தொடர்ச்சியாகக் கண்காணிப்பது

Treatment - தீவிர சிகிச்சை அளிப்பது

இந்த நான்கும்தான் தாராவியில் தொற்று ஒற்றை இலக்கை நோக்கிச் சென்றததற்கு மிக முக்கியக் காரணங்கள். நாட்டில் கரோனா பரவல் ஆரம்பித்த முதலே, மும்பை மாநகராட்சி, தாராவியை நினைத்து அச்சத்தில் ஆழ்ந்திருந்தது. அது பயந்ததுபோலவே ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் தொற்று அப்பகுதியில் பதிவானது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்து தொற்று பரவல் தீவிரமாகி மே மாதம் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடக்க, உயிரிழப்பு ஐம்பதைத் தாண்டியது.

இதனால் விழிபிதுங்கி நின்ற மும்பை மாநகராட்சி, 4டி நடைமுறையைக் கையிலெடுத்தது. அதன்படி, தாராவி பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு, அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நேரடியாக அத்தியாவசியப் பொருள்கள் சென்றன. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு வீடாகச் சென்று தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொற்று உறுதியானவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறாகப் பின்பற்றப்பட்ட நடைமுறை 100 விழுக்காடு பலனை அளித்தது.

தொற்று பரவல் குறைந்ததற்கு மும்பை மாநகராட்சி மட்டும்தான் காரணமா? இல்லை தாராவி மக்களும்தான். அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமே இல்லை. அவர்களும் கரோனாவின் தீவிரத்தை உணர்ந்து தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளுடன் செயல்பட்டு, கரோனா தொற்றின் சங்கிலித் தொடரை அறுத்தெறிந்து, நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, தாராவியில் 122 பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுவருகின்றனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 370ஆக இருக்கும் நிலையில், 2 ஆயிரத்து 2 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று 11 பேருக்கு மட்டுமே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் ஜூலை 7ஆம் தேதி ஒரேயொருவருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது. ஜூலை 3ஆம் தேதி 8 பேருக்கும், ஜூலை 4ஆம் தேதி 2 பேருக்கும் ஜூலை 8ஆம் தேதி மூன்று பேருக்கும், ஜூலை 9ஆம் தேதி 9 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

கரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாகச் செயல்பட்ட பகுதிகளில் தாராவியும் ஒன்று என ஐநா அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் பாராட்டியிருந்தார். அப்போது அவர், “மக்கள்தொகை அடர்த்தியான தாராவி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட, தொற்றைக் கண்டறிதல், தொற்றின் தடமறிதல், பரிசோதனை மேற்கொள்தல், சிகிச்சை அளித்தல் (4டி) ஆகிய நடைமுறைகளால், அங்கு கரோனா சங்கிலித்தொடர் உடைப்பட்டுள்ளது” என்று கூறினார்.

தற்போது, இதனை மேற்கோள் காட்டி மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தாராவியைப் பாராட்டிப் பேசியுள்ளார். ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி இன்று கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் உலகிற்கே ரோல் மாடலாக மாறியுள்ளது, பெருமையாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதனைச் சாதித்துக் காட்டிய மும்பை மாநகராட்சி நிர்வாகம், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தாராவி மக்கள் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். உலகளாவிய பெருந்தொற்றை வீழ்த்தி மற்ற மாநிலங்களையும் நாடுகளையும் கரோனாவுக்கு எதிராக துரிதமாகச் செயல்பட தாராவி ஊக்குவித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஐநாவின் பாராட்டை மேற்கோள் காட்டி, தாராவியைப் புகழ்ந்து பேசியுள்ளார். இந்தச் சாதனைக்கும் புகழுக்கும் மும்பை மாநகராட்சி நிர்வாகமும் தாராவி மக்களும் முழுக்க முழுக்க தகுதியானவர்கள் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதையும் படிங்க:ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவி, கரோனாவை வென்றது எப்படி?

Last Updated : Jul 12, 2020, 10:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details