தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசியவாத காங்கிரஸில் பிளவா? இந்த ஆட்சி நிலைக்குமா? - விடை 4:30 மணிக்கு! - uththav

எது எப்படியாகினும் இப்போது அமைந்திருக்கும் ஆட்சி நிலைக்குமா? நிலைக்காதா? தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதா? இல்லையா? அஜித் பவார் பின்னால் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்? சரத் பவார் பின்னால் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கான பதில்கள் இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெறவிருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரியவரும் என்பது மட்டும் சர்வநிச்சயம்!

Is Nationalist Congress split?

By

Published : Nov 23, 2019, 4:37 PM IST

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் ஆகியும் யார் ஆட்சி செய்யப் போகிறார்கள் என்ற குழப்பம் மட்டும் நீடித்துக் கொண்டேயிருந்தது. மக்களின் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிற கட்சிகளை விட அதிக இடங்களை பாஜக கைப்பற்றியிருந்த போதிலும், ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தும், சிவசேனா முதலமைச்சர் பதவி கேட்டு அடம்பிடித்து ஆதரவு அளிக்காததால் பாஜகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.

இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி அமைக்க முயற்சித்தது. ஆனால், குறிப்பிட்ட காலஅவகாசத்திற்குள் ஆட்சியமைக்க முடியாத காரணத்தால், மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியும் காலஅவகாசம் கேட்டதால், குடியரசுத் தலைவர் ஆட்சி மகாராஷ்டிராவில் நவ.12ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் நவாப் மாலிக்

இத்துடன் மகாராஷ்டிராவில் அரசியல் சிக்கல் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், மீண்டும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பரபரப்பை கிளப்பின. முதலில் ஆதரவளிக்க மறுத்த காங்கிரஸ் கட்சி சரத் பவாரின் தொடர் முயற்சிக்கு ஒத்துக் கொண்டது என்று கூறப்பட்டது.

ஃபட்னாவிஸ் - உத்தவ் தாக்கரே

இந்த சூழலில், நேற்று முன்தின நள்ளிரவில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் சரத் பவாரும் திடீர் சந்திப்பை மேற்கொண்டு உச்சகட்ட பரபரப்பை எகிற வைத்தனர். இறுதியாக பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வெளியில் தாக்கரே புன்னகையுடன் புறப்பட்டுச் சென்றார். இதனால் மூன்று கட்சிகளின் கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது என்று அனைவரும் நம்பினர். அதனை உறுதிபடுத்தும் விதமாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவை சேர்ந்தவர்தான் அடுத்த ஐந்தாண்டுகளும் ஆட்சி செய்வார் என்று மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். அனைவரும் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், எவருமே எதிர்பார்த்திராத திருப்பம் இன்று காலை அரங்கேறியது.

சஞ்சய் ராவத்

பாஜகவும் தேசியவாத காங்கிரஸும் இரவோடு இரவாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி, இன்று காலை விடிந்தவுடன் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். இதனால் அரைத் தூக்கத்தில் இருந்தவர்கள் கூட அதிர்ச்சியில் விழித்துக் கொண்டனர். மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகைக்குச் சென்ற தேவேந்திர பட்னாவிஸும் அஜித் பவாரும், சத்தமின்றி முதலமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர். இருவருக்கும் அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஃபட்னாவிஸ் - அஜித் பவார்

இதன்மூலம், அனைத்து அரசியல் குழப்பமும் தீர்ந்தது என்று நினைக்கையில் சரத் பவார் அடுத்த அணுகுண்டை போட்டார். அதில், பாஜக ஆட்சி அமைப்பதற்கும் தங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை, அது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என்று கூறி குழப்பத்தை ஏற்படுத்தினார். இதற்கும் சரத் பவாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், உத்தவ் தாக்கரேவும் சரத் பவாரும் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.

சரத் பவார் - உத்தவ் தாக்கரே

மேலும் , தேசியவாத காங்கிரஸின் மூத்தத் தலைவர் நவாப், எம்.எல்.ஏ.க்களின் வருகைப்பதிவேட்டில் கையெழுத்து வாங்கி அதைக் கொண்டு அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டார் என்ற பகீர் தகவலைக் கூறினார். இதையடுத்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய மூன்று கட்சித் தலைவர்களும் சந்தித்து பேசினர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே, மூன்று கட்சிகளும் கூட்டணியில்தான் உள்ளோம் என்றும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் கூறினர்.

அஜித் பவார்

சரத் பவார் கூறுகையில், ”கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக அஜித் பவார் நடந்துகொண்டதால், அவர் சட்டப்பேரவைக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். வெற்றிபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் எங்களுக்குதான் ஆதரவளிக்கிறார்கள். அஜித் பவார் மட்டுமே பாஜகவுடன் இணைந்துள்ளார். வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தாவல் சட்டத்தை நினைவு கொள்ள வேண்டும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மூத்தத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

சரத் பவாரை கலந்தாலோசிக்காமல் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அஜித் பவாருக்கு, வெற்றிபெற்ற 35 தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம். ஏனென்றால், தன் பின்னால் உறுப்பினர்கள் இல்லாமல், பாஜகவுடன் அவர் தனியாக இணைவதற்கு வாய்ப்பில்லை.

சோனியா காந்தி - சரத் பவார் - உத்தவ் தாக்கரே

எது எப்படியாகினும் இப்போது அமைந்திருக்கும் ஆட்சி நிலைக்குமா? நிலைக்காதா? தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதா? இல்லையா? அஜித் பவார் பின்னால் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்? சரத் பவார் பின்னால் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கான பதில்கள் இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெறவிருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரியவரும் என்பது மட்டும் சர்வநிச்சயம்!

’அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை’ என்ற கூற்றுக்கு தற்போது மகாராஷ்டிரா அரசியல் களத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகளே ஆகச் சிறந்த உதாரணம்!

ABOUT THE AUTHOR

...view details