கர்நாடகா மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. 117 உறுப்பினர்களுடன் (சபாநாயகர் உள்பட) மாநிலத்தில் ஆட்சியிலுள்ள பாஜக நான்கு இடங்களில் இரண்டில் நிச்சய வெற்றியை உறுதி செய்யும். மீதமுள்ள இரு தொகுதிகளில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெல்லும். நான்காவது தொகுதியை வெல்வதில் சிக்கல் நீடித்துவந்தது.
பாஜகவின் வெற்றியைத் தடுக்கும் நோக்கில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்கும் என தகவல் வெளியானது. இந்நிலையில், நான்காவது இடத்திற்கு முன்னாள் பிரதமர் தேவ கவுடா போட்டியிடுவார் என மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவிப்புத்துள்ளது.
இதுகுறித்து தேவ கவுடாவின் மகனும், கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "சட்டப்பேரவை உறுப்பினர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பல தேசிய தலைவர்களின் அழைப்பை ஏற்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். நாளை அவர் மனு தாக்கல் செய்யவுள்ளார். அனைவரின் அழைப்பை ஏற்று போட்டியிட சம்மதம் தெரிவித்த தேவ கவுடாவுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.