ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதனால் காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
இதற்கான, அறிவிப்பு வெளியாதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை எனக் கூறி ஆகஸ்ட் 4ஆம் தேதி இரவு முதல் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை மத்திய அரசு வீட்டுக்காவலில் வைத்து இன்றுடன் 22 நாட்கள் ஆகின்றன.
காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாகக் கூறும் மத்திய அரசும், அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கும் வீட்டுக்காவலில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் விஷயத்தில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தி கோரிக்கைகள் வலுத்துள்ளபோதிலும், அவர்களின் நிலைகுறித்தும், காஷ்மீர் மக்களின் நிலை குறித்து அறிந்துகொள்ளவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் சென்ற 12 பேர் கொண்ட எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளடங்கிய குழுவும் காஷ்மீருக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், வீட்டுக் காவலில் உள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் நிலை குறித்து அறிந்துகொள்ள நமது ஈடிவி பாரத் முயற்சி மேற்கொண்டது.
முதலில், முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் இல்லத்திற்கு சென்றபோது பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து தங்களுக்கு எவ்விதமான தகவலும் வரவில்லை என்றும், ஃபரூக் அப்துல்லா மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதாகவும், பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த அதிகாரி தெரிவித்தார். மேலும் வெளியாட்களை சந்திக்கவோ, தொலைபேசியில் தொடர்புகொள்ளவோ அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வீட்டுகாவலில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் இருப்பிட காணொலி இதனைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா இல்லத்திற்கும், முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தியின் வீட்டிற்கும் சென்று பார்த்தபோது அவர்கள் அங்கு இல்லை என்றும், அவர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரில் பாதுகாப்பு கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோதிலும் 22ஆவது நாளாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.