தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-இன்படி, ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் எந்த நியாய விலைக் கடையில் வேண்டுமானாலும் தங்களுக்கான உணவு தானியங்களை பெற்றுக்கொள்ளலாம் என்பதை ‘ஒரு நாடு ஒரே ரேசன் கார்டு’ திட்டம் உறுதிபடுத்துகிறது. நியாய விலைக் கடைகளில் மின்னணு விற்பனைக்கான கருவிகள் பொருத்தப்பட்டு, ஆதார் அடையாளம் அதோடு இணைக்கப்பட்டவுடன் இது நடைமுறைக்கு வரும்.
பணியின் காரணமாக வெளிமாநிலங்களில் வசித்துவரும் குடிபெயர் தொழிலாளர்களை மனதில் கொண்டு இத்திட்டத்தை அமல்படுத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 4.1 கோடி மக்கள் வெளிமாநிலங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். 1.4 கோடி மக்கள் மாநிலங்களுக்குள்ளேயும் வெளியேவும் வேலைவாய்ப்புக்காக குடிபெயர்ந்துள்ளனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள கரோனா நிவாரணத் தொகுப்பில், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் 8 கோடி பேருக்கு 3,500 கோடி ரூபாய் மதிப்பில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கு 5 கிலோ தானியங்களும், 1 கிலோ பயறு வகைகளும் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
குடிபெயர்ந்த தொழிலாளர்கள் ரேசன் அட்டையை பிற மாநிலங்கள் பயன்படுத்துவதன் மூலம் 23 மாநிலங்களிலுள்ள 83% பேர் இதனால் பயன்பெறுவார்கள் என ‘ஒரு நாடு ஒரே ரேசன் கார்டு’ திட்டத்துக்கு ஆதரவாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2021-க்குள் ரேசன் அட்டை வைத்துள்ள அனைவரையும் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவருவது மத்திய அரசின் திட்டமாகும்.
இத்திட்டம் தற்போது 12 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அவை ஆந்திரா, கோவா, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் திரிபுரா ஆகும். மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிலைப்பாடைப் பொறுத்து இத்திட்டங்கள் அமலுக்கு வரவுள்ளது. இதுவரை சில யூனியன் பிரதேசங்கள் உள்பட 31 மாநிலங்கள் இத்திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுருக்கின்றன. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான துறை, மற்ற மாநிலங்களிடமும் கையெழுத்து பெறும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
‘ஒரு நாடு ஒரே ரேசன் கார்டு’ திட்டத்தின் பயன்கள்:
தேசிய அளவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டபின், நாட்டில் உள்ள எந்த நியாய விலைக் கடைகளில் வேண்டுமானாலும் ரேசன் கார்டு வைத்திருக்கும் நபர்கள் தங்களுக்கான உணவு தானியப் பொருட்களை வாங்க முடியும்.
இது குடிபெயர்ந்த தொழிலாளர்கள் அரசு மானியத்தில் உணவு தானியங்களை பெறுவதற்கான எல்லையை விரிவடையச் செய்கிறது.
ஒரு வியாபாரி முறையாக பொருட்களை வழங்காவிட்டால், உடனடியாக வேறு வியாபாரியிடம் பொருட்களைப் பெறும் வசதியை இது ஏற்படுத்தித் தருகிறது.