இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சமூகநீதியை சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவிகளுக்கு தனியார் துறையிலிருந்து 30 பேரை நியமிக்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சமூகநீதியின் அடிப்படையான இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக ஆட்சிக்கு வந்ததில் இருந்து செயல்பட்டு வரும் மத்திய பாஜக அரசு, மண்டல் கமிஷன் தீர்ப்பின்படி இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட 27% இடஒதுக்கீட்டை ஒரே ஒரு துறையில் கூட முழுமையாக செயல்படுத்தவில்லை. பட்டியலின, பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டையும் புறக்கணித்து, மத்திய அரசின் துறைகளில் இடஒதுக்கீட்டு பிரிவினர் யாருக்கும் இடமில்லை என்ற எழுதப்படாத உத்தரவை வேகமாக செயல்படுத்தி வருவது நாட்டின் சமூகநீதிக் கட்டமைப்பையே உருக்குலைக்கும் செயலாகும்.
புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, வங்கித் தேர்வுகள், யூ.பி.எஸ்.சி தேர்வுகள், ரயில்வே தேர்வுகள், தபால் தந்தி இலாகா உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில், ஏற்கனவே சமூகநீதிக்குச் சாவுமணி அடித்து, போதாக்குறைக்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு மின்னல் வேகத்தில் 10% இடஒதுக்கீடு அளித்து, இந்நாட்டின் நிர்வாகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்க உரிமையில்லை என்று இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது இணைச் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்குத் தனியார் நிறுவனங்களில் இருந்து ஆட்களை, அதுவும் பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் ஊறிப் போனவர்களை அழைத்து வந்து, எஞ்சியிருக்கும் சமூகநீதிக் கட்டமைப்பையும் தகர்க்க, மோடி அரசு திட்டமிடுகிறது.