மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராதவிதமாக, குடியரசுத் தலைவர் ஆட்சி இன்று திரும்பப் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்று கொண்டனர்.
இதனிடையே காங்கிரஸ் சார்பில் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, "மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்திருப்பது சட்டவிரோதமானது. ஒப்பந்த அடிப்படையில் பாஜக ஜனநாயகத்தை படுகொலை செய்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் மிரட்டப்பட்டுள்ளார். அவர் ஒரு சந்தர்ப்பவாதி. பாஜகவுக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு தந்துள்ளார்கள் என்பதை ஆளுநர் ஆராயவில்லை. அஜித் பவாரை சிறையில் அடைப்பேன் என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அவரை துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் ஆக்கியுள்ளார்" என்றார்.