அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு வரும் புதிய ஏர் இந்தியா ஒன் போயிங் 777-300ER விமானங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் ஆகியோர் பயணம் செய்யவுள்ளனர்.
முன்பிருந்த போயிங் ரக விமானம், முழு எரிபொருள் திறனுடன் 10 மணிநேரம் பயணம் செய்யவல்லது. ஆனால், இந்தப் புதிய ரக விமானம் 17 மணிநேரம் பயணம் செய்யும் திறன் கொண்டுள்ளது. மேலும், ஏவுகணைகள் விமானத்தை தாக்கும்பட்சத்தில், அதனை முன்கூட்டியே அறிந்து தடுத்து நிறுத்தும் வசதியும் இதில் உள்ளது. அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட இந்த விமானத்தை விமானப்படை அலுவலர்களே இயக்குவார்கள் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக கரோனாவால் இந்த விமானத்தின் வருகை தள்ளிச் சென்றது. தொடர்ந்து, இந்த வாரம் இந்தியாவிற்கு விமானம் வரும் என போயிங் நிறுவனம் அறிவித்தையடுத்து, ஏர் இந்தியா, விமானப்படை, பாதுகாப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த மூத்த அலுவலர்கள் கொண்ட குழுவினர் அமெரிக்கா சென்றனர்.
இந்நிலையில், பிரதமருக்காக வரவிருந்த இந்தப் புதிய விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான வருகை தற்போது மீண்டும் தள்ளிச் சென்றுள்ளது. விமானத்தில் சிறிய தொழில்நுட்ப கோளாறு என்றால் அதை சரிசெய்ய போயிங் அதிக நேரம் எடுக்காது என்றும், விரைவில் விமானங்கள் இந்தியாவிற்கு வர அதிக வாய்ப்புள்ளது எனவும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.