இந்தியாவில் கரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அன்மையில் அரசு ஒப்புதல் அளித்திருந்த நிலையில், டெல்லியில் கரோனா பாதித்த நபர் பிளாஸ்மா சிகிச்சை பெற்று பூரண குணமடைந்துள்ளார்.
டெல்லியில் உள்ள சகேத் பகுதியைச் சேர்ந்த நபர் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி கரோனா பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நாள் செல்ல செல்ல அவரது உடல்நிலை பெரும் பாதிப்பிற்குள்ளான நிலையில், கடந்த எட்டாம் தேதி அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் நீண்ட நாள்கள் வென்டிலேட்டரிலேயே வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பிளாஸ்மா சிகிச்சை முறைக்கு மத்திய சுகாதாரத்துறை அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டது. அதன் காரணமாக அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டது. அதனைத் தொடர்ந்து இன்று அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
தீவிர நோய் தொற்று ஏற்பட்டு வென்டிலேட்டரில் இருந்த நபர், பிளாஸ்மா சிகிச்சை காரணமாக குணமடைந்துள்ளது இந்த சிகிச்சை முறை மீது நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இதுவரை 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:தாராவியில் கரோனாவை கட்டுப்படுத்த இந்திய மருத்துவ சங்கம் கையாளும் புதிய உத்தி!