டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மூன்று நாள்களாக நிலவிவரும் வன்முறையால் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கலவரத்தைத் தடுக்க காவல் துறை தவறியதாகவும், உள் துறை அமைச்சர் அமித் ஷா இதற்கு முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கைவைத்து, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
டெல்லி வன்முறையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்ப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரத் தவறிய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின்படி குடியரசுத் தலைவருக்கே அதிக பொறுப்புள்ளது. அரசின் மனசாட்சியாக இருந்து அதன் பொறுப்புகளை உணர்த்தி ராஜ தருமத்தின் தூணாக இருக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் அளித்து புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய உள் துறை அமைச்சகத்தின் கண்காணிப்பு வளையத்திற்குள் வடகிழக்கு டெல்லி!