இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள் இயங்க மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டெல்லியிலுள்ள காஸிபூரில் சமூக விலகலைப் பின்பற்றி சந்தை திறக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சமூக விலகல் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது ட்ரோன் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், odd-even திட்டம் பின்பற்றப்பட்டு ஒருநாள் விட்டு ஒரு நாள் மட்டுமே கடைகள் இயக்கப்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் தலைவர் ஆதில் அகமது கான் கூறுகையில், "ஆசாத்பூர் சந்தையில் பின்பற்றப்பட்ட odd-even திட்டம் வெற்றி பெற்றுள்ளது. எனவே டெல்லியில் உள்ள அனைத்து சந்தைகளிலும் இதை பின்பற்றவுள்ளோம்.
டெல்லி மார்கெட்டில் பின்பற்றப்படும் சமூக விலகல் காய்கறிகளையும் பழங்களையும் ரசாயனங்களைப் பயன்படுத்தச் சுத்திகரிக்க முடியாது. எனவே ஒரு நாள் விட்டு ஒரு நாள் கடைகள் இயங்க அனுமதி அளித்துள்ளோம். அதன்படி காய்கறி விற்பனை நடக்கும் ஒரு கடை அடுத்த நாளில் முறையாகச் சுத்திகரிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: குமாரசாமி வீட்டு திருமணத்தில் எந்தவிதமான விதிமீறல்களும் இல்லை!