கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறையில் நெரிசலைக் குறைக்க கைதிகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியில் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் கலவரமாக வெடித்தது. அக்கலவரத்திற்கு காரணமானவர்கள் என பலரையும் டெல்லி காவல் துறையினர் ஊரடங்கு காலத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமியத்- ஐ-ஹிந்த் அமைப்பு சார்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ”கரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி போராட்டத்தில் கலவரம் செய்ததாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கைது செய்கையில் அவர்களின் குடும்பங்களுக்கு தெரிவிக்கப்படாமலும், உச்ச நீதிமன்றத்தின் விதிகள் மீறப்பட்டும் வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.