டெல்லி தேர்தலைப் பொறுத்தவரை அதில் பல்வேறு சவால்கள் உள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றியைப் பெறும். இதுவே, தொங்கு சட்டப்பேரவையோ அல்லது சுமாரான வெற்றியோ பெறுமேயானால், நாடு முழுவதும் பெரும் போராட்டத்திற்கு வழிவகுத்த குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் அமல்படுத்தும் வேலைகளை மத்திய அரசு துரிதப்படுத்தத் தொடங்கிவிடும்.
டெல்லி தேர்தலில் பாஜக ஆக்ரோஷமாக நுழைவதற்கு முன், ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி மிகத் தெளிவாக இருந்தது. கருத்தியல் ரீதியாக தன்னை நடுநிலைவாதியாகக் காட்டிக்கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால், தலைநகரைச் சிறந்த நகராக மாற்றுவேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.
கெஜ்ரிவால் ஆட்சியிலிருந்து ஐந்து ஆண்டுகளில் அவர் தனது வாக்குறுதிகளில் அனைத்தையும் நிறைவேற்றவில்லை என்றாலும் ஊழலை ஒழிப்பது, இலவச மின்சாரம், இலவச குடிநீர் என முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். மேலும், டெல்லி முழுவதும் மொஹல்லா கிளினிக்குகள் உருவாக்கியது மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளையும் இலவச மருத்துவச் சேவை வழங்கவும் அவர் நிர்பந்தித்தார். கெஜ்ரிவாலின் இந்தத் திட்டத்தால் இதய அறுவை சிகிச்சைகளும்கூட நம் தலைநகரில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
டெல்லி தேர்தல் வாக்குப்பதிவுக்கு 15 நாள்கள் முன்புவரை, பாஜக தேர்தல் பரப்புரையைப் பெரியளவில் மேற்கொள்ளவில்லை. ஆனால் அதன்பின் பாஜக செய்த தேர்தல் பரப்புரையில் முழுவதும் நச்சுத்தன்மை நிறைந்திருந்தது. தேர்தலுக்காக எந்தவொரு கட்சியும் இந்தளவுக்கு மோசமான நச்சுத்தன்மை பரப்பும் பரப்புரையை மேற்கொண்டதில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எதிராக ஷாகீன் பாக் பகுதியில் நடைபெற்றுவரும் பெண்களின் போராட்டம் குறித்து பேசும்போது அமித் ஷா, "இத்தேர்தலில் வாக்குப்பதிவின்போது பாஜக ஆதரவாளர்கள் ஷாகீன் பாக்கிற்குக் கேட்கும் வகையில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யவேண்டும்" என்றார்.
அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்குப் போராட்டக்காரர்கள் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் பரப்புரையில் கூறினார்கள். முழக்கங்களை எழுப்புபவர்கள் எல்லாம் துரோகிகள் என்று கூறிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்களை சுட வேண்டும் என்றும் தனது பரப்புரையில் கூறியிருந்தார். மற்றொரு பாஜக எம்.பி. பிரவேஷ் வர்மா, போராட்டக்காரர்கள் இந்துக்களின் வீடுகளில் நுழைந்து, பாலியல் வன்புணர்வு செய்வார்கள் என்று கூறினார்.
ஆனால், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எல்லாம் பெண்கள் என்பது அவருக்குத் தெரியாமல் போய்விட்டது போலும். தலைவர்களின் இந்த வன்முறை தூண்டும் பேச்சுக்களால் உந்தப்பட்ட இரு பாஜக ஆதரவாளர்கள், ஷாகீன் பாக் பகுதியிலும் ஜாமியா பல்கலைக்கழகம் அருகிலும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். நல்வாய்ப்பாக இந்தத் துப்பாக்கிச் சூட்டில் யாரும் உயிரிழக்கவில்லை.
வாக்காளர்களை வகுப்புவாரியாகப் (மத ரீதியாக) பிரிக்க வேண்டும் என்பதை இந்த வெறுப்பு உமிழும் பேச்சின் முக்கிய நோக்கம். இந்தச் செயல்முறை பாஜகவுக்கு நிறைய முறை வேலை செய்துள்ளது. இதானால் ஏன் மற்றொரு முறை இதே யுக்தியை பயன்படுத்தக்கூடாது என்று அக்கட்சித் தலைமை நினைத்திருக்கலாம்.
இதுமட்டுமின்றி, சிஏஏ - என்ஆர்சி போராட்டங்களால் பல சாலைகள் மூடப்பட்டிருந்தது, போராட்டங்களில் பங்கேற்காதவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. இதுவே மத்திய அரசின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டு, அவர்களின் கவனத்தை ஈர்க்கக் கடும் குளிரில் அமர்ந்து போராடிவரும் பெண்களை அச்சுறுத்துமாறு தனது ஆதரவாளர்களுக்குக் கட்டளையிட பாஜகவுக்குப் போதுமானதாக இருந்தது.