கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடிவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் ட்விட்டரில் பதிவு ஒன்று வெளியிட்டார். அந்தப் பதிவுகள் இரண்டு பிரிவுகளுக்கிடையே பகைமையை தூண்டும் விதமாக உள்ளது எனக் கூறி கிரேட்டாவுக்கு எதிராக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அச்சுறுத்தல்களால் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள மாட்டேன் - கெத்து காட்டும் கிரேட்டா
டெல்லி: விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க்குக்கு எதிராக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அச்சுறுத்தல்களால் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
கிரேட்டாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அதில் அவரை குற்றம்சாட்டப்பட்டவராக குறிப்பிடவில்லை. இரண்டு பிரிவுகளுக்கிடையே பகைமையை தூண்டுதல், சதிச் செயலில் ஈடுபடுதல், அமைதியை குலைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அச்சுறுத்தல்களால் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள மாட்டேன் என கிரேட்டா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "தற்போதும், விவசாயிகளுக்கு ஆதரவாகதான் நிற்கிறேன். அவர்களின் அமைதி வழி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறேன். எந்த விதமான அச்சுறுத்தல்களுக்கும் வெறுப்புக்கும் மனித உரிமை மீறல்களுக்காகவும் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டேன்" எனப் பதிவிட்டுள்ளார்.