கரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசும் மக்களுக்கு எவ்வாறு உதவலாம் என சிந்தித்துவரும் நிலையில், டெல்லி மாநில அரசு கைதிகளை அழைத்துச் செல்லும் காவல் துறை வாகனங்களை கரோனா வைரஸ் பரிசோதனை மையங்களாக மாற்றியுள்ளன.
டெல்லியிலுள்ள 11 மாவட்டங்களில் உள்ள 79 மண்டலங்களிலும் காவல் துறையினரின் 22 வாகனங்கள் நடமாடும் கரோனா வைரஸ் பரிசோதனை மையங்களாக செயல்படவுள்ளன.
இதுகுறித்து டெல்லி காவல்துறை ஆணையர் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், '' மருத்துவப் பணியாளர்களுக்கு சோதனை மையங்களாகப் பயன்படுத்த பெரிய வாகனங்கள் தேவைப்பட்டன. நாங்கள் கைதிகளை அழைத்துச் செல்லும் பெரிய வாகனங்களைப் பயன்படுத்த முடியுமா எனக் கேட்டோம். ஏனென்றால் கைதிகளை இந்த நேரத்தில் எங்கேயும் அழைத்துச் செல்லவில்லை. பின்னர் டெல்லியில் உள்ள 25 வாகனங்களையும் தற்காலிக பரிசோதனை மையங்களாக மாற்றியுள்ளோம்.
கரோனா வைரசை எதிர்கொள்வதில் டெல்லி முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. 24 மணி நேரமும் மக்களை வெளியே வரவிடாமல் கண்காணித்து வருகிறோம். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. அதேபோல் யாருக்கும் உணவு தேவைப்பட்டால் உடனடியாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்.