ஆயுஷ் அமைச்சகத்தின் ஆலோசனைப்படி, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் காவலர்களுக்கு எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்விதமாக முக்கிய மூலிகைப் பொருள்கள் அடங்கிய ஆயுர்வேத நோய் எதிர்ப்புச் சக்தி மருந்து அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கரோனா தீநுண்மி தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களின் உடல்நிலையைப் பேணுவதற்கு அரசு முன்வர வேண்டும் என டெல்லி காவல் துறையினர் சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஆயுஷ் அமைச்சகத்தின் கீழுள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனமும் டெல்லி காவல் துறையினரும் இணைந்து ஆயுரக்ஷ் கரோனா சே ஜங்-டெல்லி போலீஸ் கே சங் என்ற திட்டத்தின் மூலம் காவலர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மருந்து அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் வைத்ய ராஜேஷ், ஆயுர்வேத மருந்துகளின் நேர்மறை விளைவுகளை எடுத்துரைத்தார். மேலும், கரோனா பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களின் செயல்களையும் பாராட்டினார்.
டெல்லியின் காவல் ஆணையர் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா பேசுகையில், டெல்லியின் 15 மாவட்டங்களில் பணிபுரியும் சுமார் 80 ஆயிரம் காவலர்களுக்கு இந்த மருந்துகள் விநியோகிக்கப்படும் என்றார்.
மருந்துகளை பயன்படுத்துவது குறித்து இந்தி, ஆங்கில மொழியில் கையேடு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ் உள்ள அரசு மருந்தகங்களிலும், டெல்லியிலுள்ள மாவட்ட காவல் நிலையங்களிலும் மருந்துப்பொருள்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்த அவர், தொடர்ந்து 15 நாள்களுக்கு இதனை எடுத்துக்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் பார்க்க: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ’மூலிகைத் தேநீர்’ பரிந்துரைத்த மத்திய அரசு!