தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நட்சத்திர ஹோட்டல்களை தனிமைப்படுத்தப்படும் இடமாக மாற்றும் டெல்லி அரசு! - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டிய 14 நாள்களை நட்சத்திர தங்கும் விடுதிகளில் கழிக்கலாம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

arvind kejriwal
arvind kejriwal

By

Published : Mar 16, 2020, 11:29 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் தற்போது நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. இதைத் தடுக்க பல்வேறு மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன்படி வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் கட்டாயம் 14 நாள்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இதுபோன்ற கண்காணிப்பு முகாம்களில் தேவையான வசதிகள் இல்லை என்று வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள், 14 நாள்கள் கண்காணிப்பு காலத்தை நட்சத்திர விடுதிகளில் கழிக்கலாம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "வெளிநாட்டிலிருந்து டெல்லிக்கு வருபவர்கள் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ள 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு காலத்தை விமான நிலையம் அருகேவுள்ள மூன்று நட்சத்திர விடுதிகளில் கழிக்கலாம். இதற்காக விமான நிலையம் அருகே ரேட்ஃபாக்ஸ், ஐபிஐஎஸ், லெமன் ட்ரீ ஆகிய விடுதிகளை தயார்செய்துள்ளோம்.

இருப்பினும் இந்த விடுதிகளில் தங்குவதற்கான கட்டணங்களை அவர்களே செலுத்த வேண்டும். இதற்காக விடுதிகளிலுள்ள அறைகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். இதற்காக மூன்று விடுதிகளிலும் 182 அறைகள் தாயர் செய்யப்பட்டுள்ளன.

இந்த விடுதிகளில், நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 3,100 வரை வசூலிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (மார்ச் 16) முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது” என்றார்.

மேலும், கோவிட்-19 வைரஸ் தொற்றை சமாளிக்க டெல்லி தயாராகவுள்ளதாக தெரிவித்த அவர், வீட்டிலே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களையும் தொடர்ந்து கண்காணித்துவருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா சேலன்ஞ் - மோடியின் அடுத்த சரவெடி

ABOUT THE AUTHOR

...view details