கரோனா வைரசிப் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கரோனாவின் கோர தாண்டவத்தில் சிக்கித்தவித்துவருகின்றன. பெருந்தொற்றுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் திணறிவருகின்றனர்.
இந்நிலையில், கரோனா பாதித்தவர்களிடமிருந்து சமூகப் பரவல் ஏற்படாத வண்ணம் அவர்களைத் தனிமைப்படுத்துவது அவசியமாகிறது. இதனைக் கருத்தில்கொண்டு டெல்லியில் உலகின் மிகப்பெரிய கரோனா சிகிச்சை மையம் இன்று திறந்துவைக்கப்பட்டது. இம்மையத்திற்கு சர்தார் படேல் கோவிட்-19 சிகிச்சை மையம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் இம்மையத்தைத் திறந்துவைத்தார். இங்கு 10 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்மையம் டெல்லியின் சத்தர்பூர் பகுதியில் அமைந்துள்ளது.
அறிகுறியில்லாமல் கரோனா தொற்றுடன் இருப்பவர்கள், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதியில்லாதவர்கள் ஆகியோருக்கு இந்த மையம் சிகிச்சை வழங்கும். சுமார் 1,700 அடி நீளம், 700 அடி அகலம் கொண்ட இந்த மையம் கிட்டத்தட்ட 20 கால்பந்து மைதானங்களின் அளவை உள்ளடக்கியது.