நிர்பயா கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் தண்டனைக் கைதிகளாக சிறையில் வாடும் அக்சய் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. அவர்களுக்குத் தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் நாள் குறித்த நிலையில், தண்டனைக் கைதிகள் ஒருவர் பின் ஒருவராக குடியரசுத் தலைவர் மற்றும் நீதிமன்றங்களில் கருணை மனு, மறுஆய்வு மனு, கடைசி நிவாரண மனு ஆகியவற்றைத் தாக்கல் செய்துவருகின்றனர்.
இதனால் அவர்களுக்குத் தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில் நால்வரையும் தூக்கில் போட தடை விதித்து செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. முன்னதாக இந்த மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்பயாவின் தாயாரும் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த மனு மீது நீதிபதி சுரேஷ் குமார் கெய்த் இன்று தீர்ப்பளிக்கிறார். வழக்கு தொடர்பாக பேசிய தண்டனைக் கைதிகளின் வழக்கறிஞர் ஏ.பி. சிங், “இந்த வழக்கில் மட்டும் தண்டனையை நிறைவேற்ற அவசரப்படுவது ஏன்? தாமதமான நீதி மட்டுமல்ல, அதீத விரைவில் கொடுக்கப்படும் நீதியும் அநீதியாகும். தண்டனைக் கைதிகள் நால்வரும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ராம்சிங், முகேஷ் ஆகியோர் ஏழ்மையான தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்” என்றார்.
நிர்பயா என்ற மருத்துவ மாணவி 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி நள்ளிரவு ஆறு பேரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கிவீசப்பட்டார். அவருக்கு டெல்லியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: 3ஆவது முறையாகக் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு