டெல்லிப் பகுதிகளில் பரவிவரும் கலவரத்தை ஒடுக்கும் விதமாக, கூடுதல் பாதுகாப்புப் படையை மத்திய அரசு களமிறக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்த போராட்டம், கடந்த இரு நாட்களாக கலவரமாக மாறியுள்ளது. குறிப்பாக, வடகிழக்கு டெல்லிப் பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெடித்துள்ள இக்கலவரத்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, சமூக ஒற்றுமை பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அவசர பேச்சுவார்த்தையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டார். இந்த ஆலோசனையின் போது டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜலும் உடனிருந்தார். அப்போது, டெல்லியில் பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிடவும், கலவரக்காரர்களை கட்டுக்குள் கொண்டுவரவும் கூடுதல் படைகளை மத்திய அரசு களமிறக்கவேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்தார்.
இந்த கூட்டத்திற்குப்பின் ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய கெஜ்ரிவால், தங்கள் தொகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளைக் கேட்டு, தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:அதிர்ச்சி : ஈரான் துணை சுகாதாரத் துறை அமைச்சருக்கு கொரோனா !