டெல்லி மாநிலம், சுல்தான்பூரி பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவரது மகன் மனிஷுக்கு(11) கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து உள்ளது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தனது மகனை ரோகிணி பகுதியிலுள்ள அம்பேத்கர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். காய்ச்சல் என்பதால் மருத்துவர்கள் அவருக்கு கோவிட்- 19 பரிசோதனை மேற்கொண்டனர்.
இதற்கிடையில் பரிசோதனை முடிவு வருவதற்குள் அச்சிறுவன் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது தந்தை வினோத் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "எனது மகன் பரிசோதனை முடிவு வராததால் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை கொடுக்க அச்சப்பட்டனர். என்னிடம் இரண்டு லட்சம் பணம் கட்டுமாறு மருத்துவர்கள் கூறினர். தினக்கூலி தொழிலாளியான நான் சிரமப்பட்டு இரண்டு லட்சத்தை செலுத்தினேன்.
ஆனால், மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடங்கவில்லை. அதனால் தான், என் மகன் உயிரிழந்து விட்டான். அம்பேத்கர் மருத்துவமனை மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.