டெல்லியில் நடைபெற்றுவரும் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் குறித்து விவாதிக்க யூனியன் பிரதேச சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று (டிச.17) நடந்தது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக, டெல்லி யூனியன் பிரதேச அரசு ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.
தீர்மானம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், 'கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக விவசாயிகள் ஏன் தங்களது நலனைத் தியாகம் செய்ய வேண்டும். எதற்காக மத்திய அரசு, உழவர் விரோத கறுப்புச் சட்டங்களை அவர்கள் மீது திணிக்கிறது என நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.
இந்த வேளாண் சட்டங்களை நிராகரிப்பதுடன், இந்த கறுப்புச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசிடம் டெல்லி அரசு வேண்டுகோள் விடுக்கிறது.
கடந்த 21 நாள்களாக நடந்துவரும் இந்தப் போராட்டத்தில், இதுவரை 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். சராசரியாக, ஒரு விவசாயி இந்த தொடர்போராட்டத்தில், நாள்தோறும் தனது உயிரைத் தியாகம்செய்து வருகிறார். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு விவசாயியும் பகத்சிங்காக மாறிவிட்டனர்.