நாட்டின் புனித நதியாகக் திகழும் கங்கை ஆறு பூமிக்கு வந்த நிகழ்வை கொண்டாடும்விதமாக கங்கா தசரா என்ற விழா கொண்டாடப்படுகிறது. இதனை உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பிகார், மேற்கு வங்கம் என கங்கை ஆறு பாயக்கூடிய மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
கங்கா தசரா என்றால் கங்கையில் நீராடக்கூடிய 10 நாள்கள் என்று பொருள்படும். வைகாசி மாதம் அமாவாசை மறுநாளிலிருந்து பத்து நாள்கள் நாம் கங்கை நதியில் மூழ்கி குளித்தால் 10 வித பாவங்கள் நீங்கி முக்தியைத் தரக்கூடிய உயர்வு நிலையை அடைய முடியும் என புராணங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பரூக்காபாத் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி கங்கா தசரா விழா கொண்டாடப்பட்டுள்ளது. இது குறித்து வலைதளங்களில் ஒரு காணொலி வலம்வருகிறது. அதில், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தகுந்த இடைவெளியின்றி தசரா விழாவினை கொண்டாடியது பதிவாகியுள்ளது.