கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்குமிடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. இதனிடையே, கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்குமிடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றத்தை தணிக்க பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால், இருதரப்பு ராணுவ வீரர்களை படிப்படியாக திரும்பப் பெற்று வருகின்றன.
கடந்த 14ஆம் தேதி சூசல் பகுதியில் ராணுவ கமாண்டர்கள் இடையே நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஃபிங்கர் மற்றும் டெப்சாங் பகுதிகளில் பதற்றத்தை தணிப்பதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய பங்காக இருந்தது. இதனைத்தொடர்ந்து இருநாட்டு வீரர்களும் போர்த் தளவாடங்கலை விளக்கிக்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜூலை 17, 18ஆகிய தேதிகளில், இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கு செல்வதாக அறிவித்தார். இதனிடையே, கடந்த 3ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி லடாக் பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களுடன் உரையாடி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை கேட்டறிந்தார்.