இந்தியாவில் கரோனா தீநுண்மி பரவலின் நிலை குறித்து கண்டறிய ஏதுவாக சீனாவின் குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக், ஜுஹாய் லிவ்ஸன் ஆகிய நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு ரேபிட் கிட் சோதனைக் கருவிகளை இறக்குமதி செய்தது.
இருப்பினும் ரேபிட் கிட் சோதனைக் கருவிகளில் முடிவுகள் குழப்பம் அளிக்கும்வகையில் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து நடைபெற்ற விசாரணையை அடுத்து ரேபிட் கிட் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவுறுத்தியது.
மாநில அரசுகள் தங்களிடமுள்ள ரேபிட் கிட் கருவிகளை மத்திய அரசுக்குத் திருப்பியளிக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கேட்டுக்கொண்டது. ரேபிட் கிட் கருவிகள் அந்த நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்பப்படும் என்றும் ஆர்டர் ரத்துசெய்யப்படுவதால் இந்தியாவுக்கு ஒரு ரூபாய்கூட இழப்பில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் இந்தக் குற்றச்சாட்டிற்கு சீனா பதிலளித்துள்ளது. இது குறித்து சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ராங் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"ரேபிட் கிட் சோதனைக் கருவிகள் குறித்த மதிப்பீட்டு முடிவுகள் குறித்தும் அதைத்தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் எடுத்துள்ள முடிவு குறித்தும் நாங்கள் பெரும் கவலை கொண்டுள்ளோம். சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருத்துவப் பொருள்களின் தரத்திற்கு நாங்கள் அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறோம்.
சிலர் சீனா பொருள்கள் மீது தரமற்றது என்று முத்திரை குத்தும் முன்முடிவுகளுடன் எங்கள் பொருள்களை அணுகுவது முற்றிலும் நியாயமற்ற பொறுப்பற்ற செயல்.