புதுச்சேரி என்றாலே மது என்ற வார்த்தையும் இணைந்து பேசப்படுகிறது. அந்தளவிற்கு புதுச்சேரிக்கும், மது விற்பனைக்கும் நீண்ட நெடிய தொடர்புண்டு. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் வெளிநாடு, உள்நாடு உள்ளிட்ட 800 வகைளான மதுபானங்கள் சற்று குறைந்த விலையில் கிடைப்பதே, இந்தப் பெயருக்குக் காரணம். ஆனால், கரோனா ஊரடங்கினால் இந்த நிலை முற்றிலும் மாறி, தமிழ்நாட்டைக் காட்டிலும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், புதுச்சேரியில் மதுபானங்கள் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.
இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத கலால் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கோவிட் வரி விதிப்பால் விற்பனை தொடங்கப்பட்ட முதல் நாளில் புதுச்சேரி, காரைக்காலைச் சேர்த்து மொத்தம் 3 கோடிய 83 லட்சம் ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகியது. அதுவே, இரண்டாம் நாளில் இந்த இரண்டு பிராந்தியங்களையும் சேர்த்தே 1 கோடியே 35 லட்சம் ரூபாய்க்கு தான் மதுபானங்கள் விற்பனையாகின. இது நாளுக்கு நாள் குறைவாகவே, அரசுக்கு வரி வருவாய் வந்துள்ளது' என புள்ளி விவரத்தைக் கூறினார்.
சுற்றுலாப்பயணிகளின் வருகை தளர்வு அளித்தும்; தங்கும் விடுதிகள் திறக்க, மதுபாரில் மதுஅருந்த அனுமதி அளிக்கப்படாததால் விற்பனை குறைந்தது அரசுக்கு வரவேண்டிய வருவாயை குறைத்துள்ளது.
இது குறித்து எப்.எல்.டு ஒயின்ஸின் தலைவர் சுதாகர் கூறுகையில், 'புதுச்சேரியில் கிட்டத்தட்ட 350 மதுபானக் கடைகள் உள்ளன. மதுபானக் கடைகளை புதுப்பிக்க ஆண்டிற்கு ரூ.10 லட்சம் கட்டணம் செலுத்தி வருகிறோம். புதுவை மாநிலத்தில் 15 முதல் 60 வயது வரை, 70 விழுக்காடு பேர் மது அருந்துவார்கள். 30 விழுக்காடு நபர்கள் மதுபானங்களை மொத்தமாக வீட்டிற்கு வாங்கிச் சென்று குடிப்பார்கள்.
புதுச்சேரியில் வெளிமாநில மக்களை வைத்து தான் மது உள்ளிட்ட பெரும்பாலான வியாபாரங்கள், தொழில்கள் நடக்கின்றன. கரோனா காலத்திற்கு முன்பு மதுபானங்கள் நாளொன்றுக்கு 75 விழுக்காடு விற்பனையாகும். சனி, ஞாயிறு தினங்களில் 100 விழுக்காடு விற்பனையாகும். தற்போது 30லிருந்து 35 விழுக்காடு மட்டுமே விற்பனை நடைபெறுகிறது' என்றார்.