பிளாஸ்டிக் இல்லா ஹைதராபாத்தை உருவாக்கும் நோக்கில், பெருநகர ஹைதராபாத் மாநகராட்சி பிளாஸ்டிக் இல்லா தெரு விற்பனை மண்டலத்தை உருவாக்கவுள்ளது. ஹைதராபாத் ஹை டெக் சிட்டியில் உள்ள ஷில்பாரமம் அருகே இந்த விற்பனை மண்டலம் தொடங்கப்படவுள்ளது. மறுசுழற்சிக்குள்ளாகும் பொருட்களை மட்டுமே வைத்து இங்கு 55 கடைகள் அமைக்கப்படவுள்ளன.
பிளாஸ்டிக் இல்லா பகுதியாக முழு மண்டலம் உருவாக்கப்படும் என பெருநகர ஹைதராபாத் மாநகராட்சி ஆணையர் ஹரி சந்தானா தசரி கூறியுள்ளார். மறுசுழற்சிக்குள்ளாகும் 40 டன் பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்தி குஜராத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்தக் கடைகளை அமைக்கவுள்ளது.
800 மீட்டர் பரப்பளவில் இந்தக் கடைகள் அமையவுள்ளன. ஒரு கடைக்கு ஹைதராபாத் மாநகராட்சி ரூ. 90,000 செலவு செய்யவுள்ளது. ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளைத் தவிர்ப்பது குறித்தும் உணவுப் பாதுகாப்பு குறித்தும் விற்பனையாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் எனவும் தசரி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உருவாகும் 'பிளாஸ்டிக் இல்லா தெரு விற்பனை மண்டலம்' இந்தியாவில் முதல் முறையாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் விற்பனையாளர்களுக்கு தரச்சான்றிதழையும் வழங்கவுள்ளது. அடுத்த 10 முதல் 15 நாட்களில் பிளாஸ்டிக் இல்லா தெரு விற்பனை மண்டலம் தொடங்கப்படும் என பெருநகர ஹைதராபாத் மாநகராட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தத் தனித்துவமான முயற்சியின் மூலம், நிலையான வளர்ச்சி அடையும் நகரமாக ஹைதராபாத்தை உருவாக்குவதையே மாநகராட்சி நோக்கமாக கொண்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய மக்கள் 130 கோடி பேரும் இந்துக்கள் - மோகன் பகவத்