சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் முதன்முதலில் கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டது. கரோனா தொற்றை ஆரம்பத்தில் அந்நாட்டு அரசு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் அந்நாட்டில் வைரஸ் பரவல் அதிகரித்தது.
பின்னர் சுதாரித்துக் கொண்ட சீன அரசு, சிறப்பு மருத்துவமனைகளைக் கட்டுவது, ஊரடங்கை அமல்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் காரணமாக அந்நாட்டில் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இருப்பினும் சீனாவைத் தவிர மற்ற நாடுகளில் கரோனா பரவல் தொடர்ந்து மோசமடைந்துவருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், இத்தாலி ஆகிய நாடுகள் வைரஸ் பரவலால் மிகவும் மோசமாக பாதித்துள்ளது.
அதேபோல இந்தியாவில் கோவிட்-19 பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கை அறிவித்தார். அப்போது பேசிய அவர், குருசேத்திர போர் 18 நாள்கள் நடைபெற்றதைப் போல கரோனாவுக்கு எதிரான இந்தப் போர் 21 நாள்கள் நடைபெறும் என்றார்.
மேலும், போரின் இறுதியில் கரோனாவை நாம் வெல்லலாம் என்றும் நம்பிக்கை முத்துகளை உதிர்த்தார். ஆனால் 21 நாள்கள் முடிவில் மாண்டது வைரஸ் அல்ல, மக்கள்தான்.
ஒருபுறம் சரியான உணவு, தங்குமிட வசதிகளின்றி பிற மாநிலங்களில் சிக்கிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்தனர். நடை பயணமாகச் சொந்த ஊர்களை நோக்கிப் புறப்பட்ட அந்த உயிர்கள், சேருமிடத்தை அடையும் முன் வெற்றுடல்களாக மாறும் அவலங்களும் அரங்கேறின.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 1 என்னதான் நடக்கிறது?
இந்தியாவின் வளர்ச்சிக்காக தங்கள் உழைப்பைத் தரும் மக்களில் 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் அமைப்புசாரா தொழில்களில் உள்ளனர். அதிலும் குறிப்பாக அவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். இன்று வானுயர்ந்து நிற்கும் பெரும்பாலான கட்டடங்களும், இன்ன பிற உள்கட்டமைப்புகளும் இவர்களின் உழைப்பால் உருவானது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன், முதலில் பிரச்னையை எதிர்கொண்டது இந்த உழைக்கும் வர்க்கம்தான். அன்றாடம் காய்ச்சிகளாக இருக்கும் இவர்களின் ஊதியம் ஒரே நாளில் முன்னறிவிப்பின்றி நின்றுபோனது. உழைக்கத் தயாராக இருந்தும், அதற்கான வேலையும் ஊதியமும் கிடைக்காததால், என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி நின்றனர்.
இத்தனை காலமாக இவர்களின் உழைப்பைச் சுரண்டிய பெரு நிறுவனங்களின் செவிகளில் இவர்களின் கதறல்கள் கேட்கவில்லை. அல்லது உடலிலும் மனதிலும் சக்தி இல்லாததால், இவர்கள் அழுகுரல் சத்தமும் பலவீனமாகியிருக்கலாம்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 ஆரம்பத்தில் அவர்கள் எங்கு தங்குவார்கள், எப்படி உணவு அருந்துவார்கள் என்பது குறித்து யாரும் அணு அளவும் கவலைகொள்ளவில்லை. வேறெங்கோ வாக்களிக்கப் போகும் இவர்களுக்கு ஏன் உதவ வேண்டும் என்று அரசியல்வாதிகளும் நினைத்துக்கொண்டார்கள் போலும்!
உண்ண உணவு இல்லை, இருக்க இடமும் இல்லை, காப்பாற்ற யாரும் இல்லை என்ற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். சொந்த ஊர்களுக்குத் திரும்பலாம் என்றால், போக்குவரத்து வசதிகள் இல்லை. இப்படி அவர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு இல்லை என்பதே பதிலாகக் கிடைத்தது.
மனதில் இருந்த சிறு நம்பிக்கையுடன் ஒரு கையில் துணிமணிகளையும், மறு கையில் தங்கள் கைக்குழந்தைகளையும் ஏந்திக்கொண்டு வேறுவழியின்றி உச்சி வெயிலில் தார் சாலைகள் வழியாக நடக்கத் தொடங்கினர்.
அரசு எடுத்த நடவடிக்கைகள்
சுமார் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்து வேறு மாநிலங்களுக்குள் நுழைந்த அந்த உழைக்கும் வர்க்கத்துக்கு கிருமி நாசினிகளைத் தெளித்து வரவேற்பு கொடுக்கப்பட்டன.
வெளிமாநிலங்களில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களைத் திரும்பி அழைத்துவர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களும் கோரிக்கை விடுத்தன. சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக மாநில அரசுகளின் இந்தக் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுக்கொண்டே போவதாலும், பல தரப்பிலிருந்து எழுந்த அழுத்தத்தாலும், கடைசியில் சிறப்பு ரயில்களை இயக்க ஒத்துக்கொண்டது மத்திய அரசு.
அதிலும்கூட சுமார் இரண்டு மாதங்களாக வேலை கிடைக்காமல் அவதிப்பட்டுவந்த அவர்களிடமிருந்து ரயில் கட்டணம் (அதுவும் கூடுதலாக ரூ. 50) வசூலிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகின.
அதைத்தொடர்ந்து அவர்களின் ரயில் கட்டணத்தை முழுவதுமாக காங்கிரஸ் ஏற்கும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார். அதன்பிறகு இந்த ரயில் கட்டணத்தில் 85 விழுக்காடு மத்திய அரசும், 15 விழுக்காட்டை மாநில அரசும் செலுத்தும் என்று அறிவித்து இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 3 இருப்பினும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் லாரிகளிலும், மினிடோர்களிலும் செல்வது ஒருபுறம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அப்படிச் செல்லும் சிலர், விபத்தில் உயிரிழப்பதும் மறுபுறும் தொடர்கிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உயிரைக் காவு வாங்கிய முக்கிய விபத்துகள்
- 24.03.2020 - தேனி மாவட்டம் ராசிங்கபுரத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ஒரு வயதுக் குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்
- 27.03.2020 - தெலங்கானாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்தனர். அவர்களில் 18 மாதக் குழந்தையும், ஒன்பது வயது சிறுமியும் அடக்கம்.
- 28.03.2020 இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் தெலங்கானாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
- 18.04.2020 பல நூறு கிலோமீட்டர் நடந்து சென்ற 12 வயது பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுமி, வீட்டிற்கு வெறும் 10 கிலோமீட்டர் இருந்த நிலையில் உயிரிழந்தார்
- 29.04.2020 சுமார் 1640 கிலோமீட்டரை சைக்கிள் மூலம் கடந்த புலம்பெயர்ந்த தொழிலாளி மத்தியப் பிரதேச எல்லையில் உயிரிழந்தார்.
- 05.05.2020 மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சென்றுகொண்டிருந்த ஆட்டோ எதிரில் வந்த லாரி மீது மோதியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
- 08.05.2020 ரயில் தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
- 13.05.2020 ஹரியானாவிலிருந்து பிகார் சென்று கொண்டிருந்த 16 பேர் மீது எதிரே வந்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
- 14.05.2020 மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் எட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், 54 பேர் படு காயமடைந்தனர்.
- 16.05.2020 உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் 21 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்
இவைதவிர பல விபத்துகளால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் உயிர்களை இழப்பது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் விபத்து சொந்த நாட்டிலேயே அகதிகள் போல ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து செல்வது, ஆதரவற்று உயிரிழப்பது எல்லாம் நம் நாட்டில் மட்டுமே நடைபெறும் ஒரு நிகழ்வாக இருக்கும்.
நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல், நான்கு சுவருக்குள் இருந்துகொண்டு அவர்களைக் குற்றம் சொல்வது என்பது சுயநலத்தின் உச்சமே தவிர வேறொன்றும் இல்லை.
இதையும் படிங்க: மாட்டு வண்டியில் 1000 கி.மீ. பயணம் - உ.பி. தொழிலாளியின் சோக பின்னணி!