பலத்த காற்றடிக்கும், குளிர் மிகுந்த கல்வான் பள்ளத்தாக்கில் 2020ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று துரதிர்ஷ்டமான இரவில், 1988ஆம் ஆண்டு முதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளின் (சிபிஎம்) கட்டமைப்பு இறுதியாக புதைக்கப்பட்டது. இந்த நாள் பத்து ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.
1993, 1996, 2005, 2013 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முறையான ஒப்பந்தங்கள்தான் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை நிர்வகிக்கும் நெறிமுறைகள் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளின் கட்டமைப்பாகும்.
இரு தரப்பினரும் படைகளை பயன்படுத்தவோ அல்லது படைகளை பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்தவோ கூடாது என்றும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை மதித்து கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான 1993 உடன்படிக்கை நிபந்தனை விதித்தது. 1996ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை வகுத்தது. அந்த ஒப்பந்தம் இருதரப்பும் அதன் ராணுவ பலத்தை மறுதரப்புக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது என்று கூறும் ஒரு போர் இல்லாத ஒப்பந்தம் போன்றது.
ஒப்பந்தத்தின்படி, உண்மையான கட்டுப்பாட்டு கோட்டின் (எல்.ஏ.சி) இரண்டு கிலோமீட்டருக்குள் அபாயகரமான ரசாயனங்கள், வெடி குண்டுகள் , துப்பாக்கிகள் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எல்.ஏ.சி.யின் சீரமைப்பு அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் இரு தரப்பினரின் எல்லை பாதுகாப்பு வீரர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் நிலைமைக்கு வந்தால், நிலைமை தீவிரமடைவதை தவிர்க்க அவர்கள் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று 2005ஆம் ஆண்டு செய்துகொண்ட நெறிமுறை ஒப்பந்தம் முடிவு செய்தது. இரு தரப்பு வீரர்களும் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால், அதற்கு மேலும் முன்னேறாமல், அந்தப் பகுதியில் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திவிட வேண்டும் என்றும் ஒரே நேரத்தில் அவர்கள் தங்கள் முகாம்களுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அது தெளிவாகக் கூறியுள்ளது.
மேலும், நேருக்கு நேர் சந்திக்கும் நிலைமை முழுவதும், இரு தரப்பினரும் ஆயுதங்களை பயன்படுத்தவோ அல்லது மற்றவருக்கு எதிராக ஆயுதத்தை பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்தவோ கூடாது, ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்துகொள்வதோடு எந்தவொரு ஆத்திரமூட்டும் செயல்களிலிருந்தும் விலகிவிட வேண்டும் என்றும் கூறுகிறது. 2013ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமும் இதனையே உறுதி செய்கிறது.
பல ஆண்டுகளாக கண்ட நேரடி சந்திப்பின் அனுபவத்தினால் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டைப் பற்றி எந்தவிதமான புரிந்துணர்வும் இல்லாத இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பின்தொடரவோ அல்லது ரோந்துப் பணியை மேற்கொள்ளவோ கூடாது என்ற ஒரு எச்சரிக்கையும் அதில் சேர்க்கப்பட்டது.
அதிகபட்ச சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும், எந்தவொரு ஆத்திரமூட்டும் செயல்களிலிருந்தும் விலகி, ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து கொள்ளவும், துப்பாக்கி சண்டை அல்லது ஆயுத மோதலைத் தடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.
1996, 2005 உடன்படிக்கைகள், பதாகை பயிற்சிகள் போன்ற செயல்பாட்டு நெறிமுறைகள் ரோந்துப் படை வீரர்களின் நேருக்கு நேர் சந்திப்புகளுக்கு வழிவகுத்தன, மீண்டும் தளத்திற்குத் திரும்பிச் செல்லுமாறு எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு பதாகைகள் மூலம் அறிவுறுத்தப்பட்டன. உண்மையைச் சொல்வதால், மிகப் பெரிய எண்ணிக்கையிலான நேருக்கு நேரான சந்திப்புகளின் போதெல்லாம் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு, துருப்புக்கள் வெளியேற்றப்பட்டு அந்தந்த முகாம்களுக்கு திரும்பிச் சென்றன.
சண்டைகள் மற்றும் கைகலப்பு போன்ற நிகழ்வுகள் இருந்தாலும், அவை பின்னர் எல்லை பாதுகாப்பு வீரர்கள் சந்திப்புகளில் விவாதிக்கப்பட்டன. பாதுகாப்பு காரணங்களுக்காக துருப்புகள் ஆயுதங்களை எப்போதுமே கொண்டுச் சென்றாலும் தகுந்த ராணுவ நடவடிக்கைள் பின்பற்றப்பட்டன என்று நிச்சயமாக கூறலாம்.
கடந்த எட்டு ஆண்டுகளில், நெறிமுறைகளின் மீறல்களாக பல சம்பவங்கள் நிகழ்ந்தன. ராக்கி நல்லா, சும்மார், பாங்கோங் சோ, டெம்சோக் மற்றும் டோக்லாம் ஆகிய இடங்களில் இவை நிகழ்ந்தன, நெறிமுறைகளை கடைபிடிக்க சொன்ன போதிலும் சீன துருப்புக்கள் பின்வாங்க மறுத்ததால், மோதல் மேலும் நீடித்தது. நெறிமுறைகள் படிப்படியாக பலவீனமடைகிறது என்பது தெளிவாகத் தெரிந்தது.
கிழக்கு லடாக், பாங்காங் சோ, கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் வெப்ப நீருற்று பகுதியான கோக்ரா ஆகிய இடங்களில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இது தற்போதுள்ள நெறிமுறைகள் மற்றும் இருதரப்பு எல்லை பாதுகாப்பு வீரர்கள் சந்திப்புகளின் தோல்வியை காட்டுகிறது.
முதன்முதலில் பாங்கோங் சோவிலும், ஜூன் 15ஆம் தேதி அன்று கல்வானில் சீன துருப்புகள் நடத்திய சண்டைகள் மற்றும் கைகலப்புகளில், சர்வதேச மாநாடுகள் மற்றும் போர் நெறிமுறைகளை முற்றிலும் புறக்கணித்து, ஆணி பதித்த மட்டைகள், முட்கம்பிகள் சுற்றிய கம்பிகள் மற்றும் கைவிரல்களில் மாட்டிகொள்ளும் கூர்மையான ஆயுதம் போன்றவற்றை இந்திய துருப்புக்களுக்கு எதிராக பயன்படுத்தியதன் மூலம், மொத்த காட்டுமிராண்டித்தனமும் கொடுமையும் அங்கு அரங்கேறின.
இந்த பழமையான ஆயுதங்களை அவர்கள் முன்னரே திட்டமிட்டு கொண்டு வந்திருந்தனர். சீனர்களின் இந்த விநோதமான வன்முறையில், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவம் தனது துணிச்சலான 20 வீரர்களை இழந்தது. உண்மையான கட்டுப்பாட்டு கோட்டை நிர்வகிக்கும் வரம்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. 1988 முதல் 2005வரையிலான கூட்டு செயற்குழுவின் 15 கூட்டங்களும், அதன் பின்னர் சிறப்பு பிரதிநிதிகளின் 22 கூட்டங்களும் நடந்த போதிலும், அது உண்மையான கட்டுப்பாட்டு கோட்டின் எல்லையை நிர்ணயம் செய்வதில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்தியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் காரணமாக, சீனர்கள் இந்த விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படுவதை விரும்பவில்லை. உண்மையான கட்டுப்பாட்டு கோட்டில் சீனர்கள் நம்பமுடியாதவர்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது, படிப்படியாக கூடுதல் நிலப்பரப்பைப் பெற முயற்சித்து வருகின்றனர், அதன்பிறகு வெளியேற மறுக்கின்றனர். அவர்களை வெளியேற்ற முயற்சி செய்யும்போது, அதற்காக அவர்கள் தனது பலத்தை பயன்படுத்த தயங்குவதில்லை. சீனர்களைப் பற்றிய நம்பிக்கையற்ற தன்மை நிச்சயமாக இருக்கிறது.
உடனடி அச்சுறுத்தல்களுக்கு எதிராக தங்களை அல்லது தங்கள் பிரிவை பாதுகாக்க படையினருக்கு உரிமை உண்டு என்பதை அங்கீகரிக்க வேண்டும். இது தனிநபர் அல்லது படைபிரிவிற்கான தற்காத்துக்கொள்ளும் உரிமை என்று அழைக்கப்படுகிறது, இது வீரர்கள் தங்கள் பலத்தை பயன்படுத்துவதில் பிற வரம்புகளைப் பொருட்படுத்தாமல் உடனடி அச்சுறுத்தல்களுக்கு எதிராக தங்களைக் காத்துக் கொள்ள அனுமதிக்கிறது.
சீனாவின் நேரடி அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக, அவசியமானதாகக் கருதப்படும் வகையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும், துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதற்கும், தன்னையும் படைகளையும் பாதுகாப்பதற்காக இந்திய ராணுவ சிப்பாய்க்கு ஆதரவாக விதிகள் நிச்சயம் திருத்தப்பட வேண்டும்.
சீனர்கள் கற்கால ஆயுதங்களைப் பயன்படுத்துவதைப் போல் நமது சிப்பாய் பயன்படுத்த மாட்டார் என்பதைக் குறிப்பிடுவது அவசியம். ஏனென்றால் அதை அவர்கள் விரும்பமாட்டார்கள். மேலும், இது போன்ற சிறுபிள்ளைத்தனத்தை அவர்கள் நாடமாட்டார்கள். நமது சிப்பாய்களின் வழக்கமும் அதுவல்ல, அதற்காக அவருக்கு பயிற்சியும் கொடுக்கப்படவில்லை.
ராணுவத்தின் ஒவ்வொரு சிப்பாயின் வாழ்க்கையும் நாட்டிற்கு மிகவும் விலைமதிப்பற்றது. நெறிமுறைகள் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளின் போரில் எல்லை பாதுகாப்பு அல்லது நாட்டின் பாதுகாப்புக்காக தனது வீரர்களை இழக்க நாடு அனுமதிக்கக் கூடாது. நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம். அதற்கான புதிய விதிகள் விரைவில் அறிவிக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க:சீன ராணுவத்தில் 20க்கும் குறைவானோர் உயிரிழப்பு - முதன்முறையாக செய்தி வெளியிட்ட சீன பத்திரிகை