சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய ட்விட்டர் பக்கத்தில், "தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் கரோனா தடுப்பூசிக்கு முதன் முதலாக அனுமதி வழங்கியிருப்பதை வரவேற்கிறோம். இந்த முடிவை இந்தியா எடுத்ததன் மூலம் அந்த பிராந்தியத்தில் கரோனாவுக்கு எதிரான போரை இந்திய மேலும் வலுப்படுத்தியுள்ளது.
தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் தொகையில் முன்னுரிமை வழங்கப்பட்டு மற்றும் பல சுகாதார நடவடிக்கைகளை எடுத்திருப்பது கரோனாவின் தாக்கத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஆதார் பூனவல்லா, "அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பல ஆபாயங்களை கையாண்டு சீரம் நிறுவனம் தடுப்பூசிகளை கையிருப்பு வைத்தற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்தியாவின் முதல் கரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான, பலனளிக்கும் விதமான தடுப்பூசிகள் அடுத்த ஒரு சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும்" என்றார்.
இந்நிலையில், சீரம் நிறுவனத்திற்கு இந்திய வர்த்தக மற்றும் சம்மேளனத்தின் கூட்டமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் உதய் சங்கர், "தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர் கிருஷ்ண எல்லா, மருத்துவர் சைரஸ் பூனவல்லா, ஆதார் பூனவல்லா ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வரலாற்று சிறப்புமிக்க சாதனையை விஞ்ஞானிகள் படைத்துள்ளனர். கரோனாவுக்கு எதிரான போரில் இந்திய நிறுவனங்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் சேர்ந்து அரசு மக்களின் பாதுகாப்பு உறுதி செய்துள்ளது” என கூறியுள்ளார்.