கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீரின் சிறப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. இதையொட்டி, ஜம்மு, காஷ்மீரில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த உமர் அப்துல்லா கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட நிலையிலும், ஜம்மு- காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி வீட்டு காவலிலேயே வைக்கப்பட்டிருந்தார்.
14 மாதத்திற்கு பிறகு அவரை நேற்று ஜம்மு- காஷ்மீர் அரசு விடுவித்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள முப்தியின் வீட்டிற்கு சென்ற ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் அவரை சந்தித்து பேசினர். இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறவுள்ள சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்க முப்தி ஒப்புக் கொண்டதாக உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.