புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனைக்கு அருகே ஹேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வசித்துவருகிறார். இவரது கணவர் இறந்துவிட்ட காரணத்தால், தனது மகளுடன் தனியாக வசித்துவந்துள்ளார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து தன்னைவிட எட்டு வயது குறைந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். அதன் பிறகு ஹேமாவிற்கு மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
இந்நிலையில், ஹேமா வீட்டில் இல்லாத நேரத்தில் முதல் கணவருக்குப் பிறந்த 16 வயது சிறுமிக்கு வளர்ப்பு தந்தை தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், உன் அம்மாவிடம் சொன்னால் உன்னையும் அம்மாவையும் கொலை செய்துவிடுவேன் என சிறுமியை மிரட்டியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், தனக்குப் பிறந்த மூன்று பெண் குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனை முதல் கணவருக்குப் பிறந்த பெண் குழந்தை தட்டிக் கேட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வளர்ப்புத் தந்தை, 16 வயது சிறுமியின் உடலில் சூடு வைத்தும், அடித்தும் துன்புறுத்தியுள்ளார்.