அரசு வேலைவாய்ப்பு, பதவி உயர்வில் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே உள்ளது என்றும், மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு பட்டியின சமூகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உள்பட பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பட்டியலின நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது பேசிய லோக் ஜன்கக்தி கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பஸ்வான், "இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு கவலை அளிப்பதாக உள்ளது. இதுபோன்ற விவகாரங்கள் அரசியலைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டால் தான் நீதிமன்றங்கள் இதில் தலையிடாது. இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்" என்றார்.