தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வுநிலை புயலாக உருவெடுத்துள்ளது. நிசார்கா என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
சுமார் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் வலுவான புயலாக நிசார்கா உருவெடுத்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படைகளின் 30 குழுக்கள் மகாராஷ்டிராவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் புயல் கரையைக் கடக்கும்போது சுமார் 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிராவின் இரண்டு கடலோர மாவட்டங்களான ராய்காட், ரத்தினகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 15 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.