கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில், சைபர் தாக்குதல் என்பது பல மடங்குகள் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சைபர் தாக்குதல்களுக்கு, பொதுமக்கள் மட்டுமின்றி பெருநிறுவனங்களும் ஏன் சில சமயங்களில் அரசு துறைகளும்கூட இரையாவர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரிலுள்ள மின் மேம்பாட்டுத் துறையின் நான்கு சர்வர்களை சைபர் குற்றவாளிகள் ஹேக் செய்துள்ளனர். இதை மின் மேம்பாட்டுத் துறையின் தலைமை பொறியாளர் உறுதி செய்துள்ளார்.
இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய மின் மேம்பாட்டுத் துறையின் தலைமை பொறியாளர் அஜாஸ் தார், "புதன்கிழமை காலை 4.45 மணிக்கு ஸ்ரீநகரிலுள்ள எங்கள் மையத்தில் இருந்த நான்கு சர்வர்கள் ரான்சம்வேர் சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டதைக் கண்டறிந்தோம். இது குறித்து சைபர் பிரிவிடம் புகாரளித்துள்ளோம்.
சைபர் பிரிவு காவல் துறையின் ஆலோசனையின்படி ரான்சம்வேரால் பாதிக்கப்பட்ட நான்கு சர்வர்களையும் தனிமைப்படுத்தியுள்ளோம். எங்களிடம் மொத்தம் 55 சர்வர்கள் இருந்தன, அதில் நான்கு சர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், எங்கள் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு துறை ரீதியான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது" என்றார்.
2010ஆம் ஆண்டுக்கு பின் ரான்சம்வேர் தாக்குதல் என்பது அதிகரித்துவருகிறது. இதில் போலியான இணைப்புகளை அனுப்பி, ஃபிஷிங் மூலம்ஒருவரது கணினி, சர்வர் ஹேக் செய்யப்படும். பின்னர், அதிலிருக்கும் தகவல்களை யாரும் நெருங்க முடியாதபடி ஹேக்கர்கள் encrypt செய்வார்கள்.
ஹேக்கர்கள் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், encrypt செய்யப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் ரீலிஸ் செய்வார்கள். சோனி, ஹெச்பிஓ போன்ற பெருநிறுவனங்களும்கூட இதுபோன்ற ரான்சம்வேர் தாக்குதல்களுக்கு இரையாகியுள்ளது.