"நான் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறேன். பேடிஎம் செயலியை எனது போனில் எனது மகன் பதிவிறக்கம் செய்தான். மூன்று நாள்களுக்கு முன்பு சந்தீப் என்பவர் என்னைத் தொடர்புகொண்டு, விவரங்களைப் புதுப்பிக்க குயிக் சப்போர்ட் என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
பதிவிறக்கம் செய்த பின்பு போனுக்கு ஒரு கோட் வரும் எனவும் அவர் தெரிவித்தார். திங்கள்கிழமை, எனக்கு மூன்று குறுஞ்செய்திகள் வந்தன. அடுத்த சில மணி நேரங்களில், 2.2 லட்சம் ரூபாய் எனது கணக்கிலிருந்து எடுக்கப்பட்டது தெரியவந்தது. நான் எனது ஓடிபியை (OTP) யாருக்கும் கொடுக்கவில்லை. என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை" என ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுமாதிரியான சம்பவம் ஒரு இடத்தில் மட்டும் நிகழவில்லை. ஸ்மார்ட்போன் பயனாளர்களில் குயிக் சப்போர்ட் செயலியைப் பதிவிறக்கம் செய்த 80 விழுக்காட்டினருக்கு இதேபோல் நடந்துள்ளது. மொபைல் பேங்கிங், இணையதள பணப் பரிமாற்ற செயலி எனக் கருதிய பயனாளர்கள் சிலர் அதனைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். மென்பொருள் நிறுவனங்கள் அதன் ஊழியர்கள் இதனால் பயனடைந்துள்ளனர். அச்செயலியின் அம்சங்களை முடக்கிய சைபர் குற்றவாளிகள் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து பணத்தைத் திருடினர்.