தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கிடையே காவிரி நீரை பங்கிடுவதில் பல ஆண்டுகளாக பிரச்னை நீடித்துவந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டத்தின்படி காவிரி மேலாண்மை ஆணையம் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆணையத்தின் தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் நடைபெற்ற ஆறாவது கூட்டத்தில், தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலர் மணிவாசன், கேரளா, புதுச்சேரி, கர்நாடக மாநிலங்களின் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
இதில், தமிழ்நாட்டிற்கு 40 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்தது. அதிகப்படியான மழை பெய்யும் காலத்தில் தண்ணீரை சேமிப்பதற்கான வசதி இல்லை என கர்நாடக அரசு வாதிட்டது. இதற்கு, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கூட்டத்தில் சிறிது நேரம் குழப்பம் நீடித்தது.