தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

5ஜி சேவை கிடைக்குமா? நெருக்கடியில் சிக்கிய தொலைத்தொடர்புத் துறை! - 5ஜி சேவை

பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் தொலைபேசி நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகை கட்டுவதில் விலக்கு அளிக்காவிட்டால், 5ஜி சேவை அனைத்து தரப்பினரிடமும் கிட்டுமா என்ற ஐயம் எழுந்துள்ளது.

தொலை தொடர்புத்துறையில் நெருக்கடி
தொலை தொடர்புத்துறையில் நெருக்கடி

By

Published : Mar 8, 2020, 9:04 AM IST

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) சேவை கிடைப்பதற்காக, கடந்த 2018ஆம் ஆண்டு தேசிய டிஜிட்டல் தொடர்புத்துறை கொள்கை வகுக்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், உள்நாட்டு உற்பத்தியில் தொலைத்தொடர்புத் துறையின் பங்களிப்பை ஆறு விழுக்காடாக உயர்த்தவும் திட்டமிடப்படுகிறது.

இதைப் போலவே, புதிய தொலைபேசி கொள்கைப்படி, புதிய முதலீடுகளால் கிடைக்கும் மேம்பட்ட வளர்ச்சியினால், அடுத்த நான்கு ஆண்டுகளில் 40 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கைக்கு மாறாக, இந்தியத் தொலைத் தொடர்புத் துறை செயல்படுகிறது.

ஐந்தாவது தலைமுறை தொழில்நுட்பம் (5ஜி) முன்னேற்றமடைய பல சாத்தியக்கூறுகளைக் காட்டுகிறது. ஆனாலும், பல தனியார் தொலைபேசி நிறுவனங்கள் அதற்கேற்ப எந்த வளர்ச்சியையும் எட்டவில்லை. சேற்றில் சிக்கிய கர்ணன் தேர் போல அசையாமல் நிற்கிறது.

தொலைபேசி நிறுவனங்கள்.

இதற்கு மத்தியில், கடந்த 1999ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, தொலைபேசி அனுமதி பெற்ற நிறுவனங்கள் தங்கள் சரிசெய்யப்பட்ட மொத்த வருமானத்தில் 8 விழுக்காட்டை அனுமதி கட்டண நிலுவைத் தொகையாகச் செலுத்த வேண்டும். இந்த ஒப்பந்தத்தை தொலைபேசி நிறுவனங்கள் மறுத்தன.

இதுதொடர்பாக நிறுவனங்கள் கூறுகையில்,"தொலைபேசி அல்லாத வருமானங்களான வாடகை, குறிப்பிட்ட சொத்துகள் விற்பனையில் கிடைக்கும் லாபம், ஈவுத்தொகை போன்ற பலவற்றை சரிசெய்யப்பட்ட மொத்த வருமானத்தில் சேர்க்கப்பட்டது. இதனால், அனுமதி கட்டணமாக பெருந்தொகை செலுத்த வேண்டியுள்ளது" எனவும் குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து இப்பிரச்னைக்காக நீதிமன்றத்தை அணுகின.

இதுதொடர்பாக, கடந்தாண்டு அக்டோபரில் உச்ச நீதிமன்றம், மதிப்பு கூட்டப்பட்ட வருவாயில் எந்த சமரசமும் செய்து கொள்ளமுடியாது. 2020ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதிக்குள் மீதித்தொகையை அனைத்து நிறுவனங்களும் செலுத்தி விட வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த குழப்பமான சூழலில், அரசுக்கு சுமார் ரூ. 47 லட்சம் கோடியை செலுத்தாமல், தனியார் தொலைபேசி சேவை நிறுவனங்கள் நிலுவையாக வைத்துள்ளன. நீதிமன்றத்தின் உத்தரவை தொலைபேசி நிறுவனங்கள் பின்பற்றவில்லை. இதையடுத்து, இந்த ஆண்டு மார்ச் 17ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்த உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது.

ஒருவேளை, இம்முறையும் இந்த நிறுவனங்கள் செலுத்த தவறினால், மேலாண்மை இயக்குனர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் என கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையினால் தொலைபேசி நிறுவனங்கள் அதிர்ந்து போயின.

இதுபோன்ற நெருக்கடி நிலைமையைச் சரியாக புரிந்து கொள்ள முயலுகின்றன. இந்த கட்டண நிலுவையினை மத்திய தொலைபேசி துறை பட்டியலிட்டுள்ளது. அதன்படி, தனியார் நிறுவனமான பாரதி ஏர்டெல் 35 ஆயிரம் கோடி செலுத்த வேண்டும்.

வோடஃபோன் ஐடியா நிறுவனம் 53 ஆயிரம் கோடியும், டாடா டெலிகாம் 14 ஆயிரம் கோடியும் செலுத்த வேண்டும். இதே நிலுவைத் தொகையினை அந்தந்த நிறுவனங்களும் கணக்கிட்டு கூறியுள்ளன. அதன்படி, ஏர்டெல் நிறுவனம் 15 முதல் 18 ஆயிரம் கோடியும், வோடபோன் ஐடியா நிறுவனம் 18 முதல் 23 ஆயிரம் கோடியும் மட்டுமே செலுத்த வேண்டியுள்ளது என வாதிடுகின்றன.

இதனை முற்றிலும் மறுக்கும் மத்திய தொலைத்தொடர்புத் துறை, ”நிறுவனங்கள் கூறும் சுயமதிப்பீடுகள், அவர்களின் சுயலாபத்திற்காகதானே தவிர, நியாயமானதல்ல. தனியார் நிறுவனங்களின் பொருளாதார நிலையை கணக்கிட்டுக் கொள்ளதான் சுயமதிப்பீடுகள் உதவும். இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது" என்றது.

இனிமேல் காலம் தாழ்த்தாமல், இப்பிரச்னையைப் பேசி, இருபக்கமும் சமரசமாகி ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், இந்தியா இதனால் பல்வேறு விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இதில், தொலைபேசி நிறுவனங்கள் முழுவதுமாக அழிவைக் கூட சந்திக்கலாம்.

நிலைமை இப்படியிருக்க, ஒரு புள்ளி விபரம் இந்தியாவில் 2024ஆம் ஆண்டு 110 கோடி செல்போன்கள் பயன்பாட்டிலிருக்குமென கூறுகிறது. இந்தியாவில் 2018ஆம் ஆண்டு, 460 கோடி ஜிகா பைட் அளவில் இணைய தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இன்னும் நான்கு வருடங்களில் ஆயிரத்து 600 கோடி ஜிகா பைட் தேவைப்படலாம் என ஒரு ஆய்வு கூறுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் எடுத்த கணக்கெடுப்பில், 61 கோடி பேர் பிராட்பேண்ட் சேவை பெறுபவர்களாக இருந்தார்கள். இன்னும் நான்கே ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 125 கோடியைத் தொடலாம்.

இந்த அதிரடியான மாற்றத்திற்கு முக்கிய காரணம் ஜியோ சேவைதான். ஜியோ சிம் சந்தைப்படுத்தப்பட்ட பிறகு, இணைய சேவை முன்பை விட வேகமாக பயன்படுத்தப்பட்டது. முதலில் இலவசமாகவும், பின்னர் மலிவான விலையிலும் இணைய வசதி மக்களிடையே பழக்கப்படுத்தப்பட்டது.

ஜியோ மேற்கொண்ட இந்த விற்பனை யுக்தியால், இந்தியாவில் கோலோச்சிக் கொண்டிருந்த அநேக தனியார் தொலைபேசி நிறுவனங்களின் வருவாய் சரிந்தது. இந்த வருவாய் இழப்பு அந்தந்த நிறுவனங்களை மட்டுமில்லாமல், நாட்டின் வருவாயையும் அசைத்து பார்த்தது.

சரிசெய்யப்பட்ட மொத்த வருமானத்தில் கட்ட வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும், நிறுவனங்களால் கட்ட முடியவில்லை. இந்தக் கட்டணத்தை 15 நிறுவனங்கள் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது மூன்று மட்டுமே சேவையில் உள்ளன.

இந்நிலையில், மத்திய தொலைதொடர்பு துறை, ஜி.எஸ்.டி வரி, அனுமதி கட்டணம், வட்டியுடன் கூடிய நிலுவைத் தொகை ஆகியவற்றை விரைவாகச் செலுத்த தொலைபேசி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாத வோடபோன் நிறுவனம், இந்தியாவை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளது.

வோடபோன் நிறுவ சங்கத்தினர், “ நிறுவனம் மிக மோசமான பொருளாதார சூழ்நிலையில் உள்ளது. சரிசெய்யப்பட்ட மொத்த வருமானத்தில் கட்ட வேண்டிய தொகையில் விதிவிலக்கு அளிக்க வேண்டும். ஒருவேளை இந்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படாதபட்சத்தில், இணைய வசதிக்கான கட்டணத்தை ஏழு அல்லது எட்டு மடங்கு உயர்த்த வேண்டும். ஒருவேளை மத்திய அரசு இந்த விவகாரத்தை கவனித்து சரிசெய்யாமல் போனால், ’டிஜிட்டல் இந்தியா கனவு’ வெறும் கனவாக மட்டுமே இருக்கும்.

மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறைகள் அறிவின் ஊற்றாக உள்ளதாகவும், அவை ஒவ்வொரு குடிமகனின் தேவையை நிறைவேற்றுவதாகவும் கூறினார். அறிவியல், தொழில்நுட்பப் பலன்களை இவ்வளவு எளிதாக கிடைக்கச் செய்ததற்கு எங்களைப் போன்ற நிறுவனங்களை பாராட்டினார். இந்த விசயங்கள் வெறும் பயன்பாடு, நிறுவனங்களின் வருமானம் என்ற அளவில் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தோடு தொடர்புடைய விசயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.

எந்த ஒரு பொருளுக்கும் பயன்பாட்டாளர்கள் பெருகும்போது, அதனுடைய தேவைகள் அதிகமாகும். அதுபோலதான், தொலைபேசி நிறுவனங்களின் சேவையும். இந்த துறை முன்னேறினால், தகவல் தொழில்நுட்பத் துறைகள் முன்னேற்றமடையும்.

குறிப்பாக, வரப் போகும் 5ஜி சேவை சாமானியர்களுக்கும் எளிதில் கிடைக்கும். மத்திய அரசின் தொலைபேசி கொள்கையும் இதைத்தான் வலியுறுத்துகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, மெகா ஹெர்ட்ஸின் அடிப்படை விலையை 492 கோடியாக டிராய் நிர்ணயித்தது.

மீண்டும் அதே விலை நிர்ணயமாகுமா எனத் தெரியவில்லை. இந்த நிச்சயமில்லா நிலையில் தொலைபேசி நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியை சந்திக்க இயலாமல், வர்த்தகத்திலிருந்தே விலகிக் கொள்கின்றன. இந்நிலையில், புதிதாக வரவிருக்கும் 5ஜி சேவையின் அலைக்கற்றை ஏலத்தில், 50 ஆயிரம் கோடி கொடுத்து பங்கேற்க முடியாதென ஏர்டெல் பின்வாங்கியுள்ளது.

உலகளவில் 40 தொலைபேசி நிறுவனங்கள் 5 ஜி சேவையை வழங்கி வருகின்றன. ஆனால், இந்தியாவில் ஏலத்தில் பங்கேற்க கூட நிறுவனங்கள் தயாராகயில்லை. சர்வதேச நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்கு அவை தங்களை தயார்படுத்திக் கொள்ளவில்லை என்றே சொல்லலாம்.

இந்த நெருக்கடி சூழ்நிலையை மத்திய அரசு மிகவும் நுட்பமாக கையாள வேண்டும். இந்திய அரசின் அரசியல்ரீதியான முடிவுதான் 5ஜி தொழில்நுட்ப சாத்தியக் கூறுகளில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த இக்கட்டான நேரத்தில் நிலுவைத் தொகைக்கு நெருக்கடி கொடுத்து கால விரயம் செய்தால், நிறுவனங்கள் அனைத்து சேவைகளிலிருந்தும் தன்னை விலகிக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. அதனால், இந்த கட்டணத் தொகை விவகாரத்தில் விதிவிலக்கு கொடுப்பது சில நல்ல முடிவுகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தலாம்.

இதனோடு 5ஜி அலைக்கற்றைக்கான ஏல விலையையும் குறைக்கலாம். இதுவே, பொருளாதார நெருக்கடியிலிருந்து தொலைபேசி நிறுவனங்கள் மீள வழி வகுக்கும். தொலைபேசி நிறுவனங்களுக்கு அரசு கொடுக்கும் அழுத்தம், அதன் வாடிக்கையாளர்களின் சேவைக் கட்டண உயர்வில்தான் முடிகிறது. எதிர்காலத்தில் 5ஜி சேவை அனைத்து தரப்பினருக்கும் கிடைப்பது அரசின் முடிவில்தான் இருக்கிறது.

இதையும் படிங்க: ரூ.53,000 கோடி நிலுவைத் தொகை கட்டவேண்டிய வோடபோன் சி.இ.ஓ நிதியமைச்சருடன் சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details