சமகால அரசியலில், குற்றம் செய்வோர் நிறைந்து இருக்கின்றனர் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வேதனை தெரிவித்திருந்தார். அரசியலில் எந்த அளவுக்கு கறை படிந்துள்ளது குறித்து பிகார் தேர்தல் மூலம் தெரியவந்துள்ளது.
குற்றத்தில் ஈடுபடுவோர் அரசியலிலிருந்து வெளியேற்ற அரசியல் கட்சிகளுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் வகுத்தது. அதில், சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் குற்றவாளிகளை வேட்பாளர்களாக அறிவிக்கும் பட்சத்தில், அவர்களின் குற்றச் செயல்கள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. குற்றச் செயல்களில் ஈடுபடாத நபர்களை காட்டிலும் குற்றத்தில் ஈடுபடுவோர் வேட்பாளர்களாக அறிவிக்க என்ன காரணம் என்பதையும் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும்.
வரலாற்றிலேயே முதன்முறையாக பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தான், வேட்பாளர்களின் குற்றச்செயல்கள் குறித்த விவரங்களை அரசியல் கட்சிகள் வெளியிடவுள்ளன. குற்றச் செயல்களில் ஈடுபடாதவர்களை வேட்பாளர்களாக அரசியல் கட்சிகள் அறிவிக்கும் என மக்கள் நம்பிக் கொண்டிருந்த நிலையில், அந்த நம்பிக்கையை பெரிய அரசியல் கட்சிகள் சிதைத்துள்ளன.
தற்போதுள்ள பிகார் சட்டப்பேரவையில், 58 விழுக்காடு உறுப்பினர்களின் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தம் 1,066 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதில், 319 பேர் மீது குற்ற வழக்கு உள்ளது.
ஆனந்த் சிங், ரித்லால் யாதவ் போன்ற குற்றவாளிகளை ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் வேட்பாளர்களாக அறிவித்துள்ளன. அது மட்டுமின்றி, குற்றவாளிகளின் மனைவிகளுக்கு சீட்டுகள் அளித்துள்ளன. கொலை, கடத்தல் உள்ளிட்ட 38 குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் ஆனந்த் சிங் என்பவரை ராஷ்ட்ரிய ஜனதா தளம் வேட்பாளராக அறிவித்துள்ளது. தொகுதி மக்களிடையே அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளதாலும் ஏழை மக்களுக்கு உதவி செய்துள்ளதாலும் அவரை வேட்பாளராக அறிவித்துள்ளோம் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தர வேண்டாம் என முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆ.ர் நாராயணன் அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் எந்த அரசியல் கட்சியும் அவரின் கோரிக்கையை ஏற்கவில்லை. குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு பணி மறுக்கப்படும்போது, ஏன் அவர்களை வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.
தங்களின் வேட்பாளர்கள் பற்றி தெரிந்து கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் பட்சத்தில் அது குறித்த விவரங்களை வெளியிடாத நபர்களுக்கு அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்க கூடாது.
வாக்களிப்பது எவ்வளவு முக்கியம் என்பது குறித்து விழிப்புணர்வு செய்து வரும் தேர்தல் ஆணையம், குற்றவாளிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்பது குறித்தும் விழிப்புணர்வு செய்ய வேண்டும். குற்றவாளிகளை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றும் வரை, தேர்தல் ஆணையம் தன்னால் முடிந்தவரை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே வாக்காளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.