2018ஆம் ஆண்டை காட்டிலும் 2019ஆம் ஆண்டில் நாட்டில் பழங்குடியினர் மீதான குற்றங்கள் 26 விழுக்காடும், பட்டியலின மக்கள் மீதான குற்றங்கள் 7 விழுக்காடும் அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டில் பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றங்களைச் செய்ததற்காக மொத்தம் 45 ஆயிரத்து 935 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டில் இதுபோன்று 42 ஆயிரத்து 793 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆக பட்டியிலின மக்கள் மீதான குற்றங்கள் 7.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.
பட்டியிலின மக்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களில் பட்டியலில் 11 ஆயிரத்து 829 வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தான் மற்றும் பிகார் மாநிலங்கள் உள்ளன.
பாலியல் வன்புணர்வு
பாலியல் வன்புணர்வு வழக்குகளை பொறுத்தமட்டில் 554 வழக்குகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. 537 வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக 510 வழக்குகளுடன் மத்தியப் பிரதேசம் உள்ளது. பழங்குடியின மக்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்குகள் 2018ஆம் ஆண்டில் ஆறு ஆயிரத்து 528 பதிவாகியிருந்தன.
இதில் அதிகப்பட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 1, 922 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தான் (1,797), ஒடிசா (576) உள்ளன. பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களிலும் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் வருகின்றன.