ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஐக்கிய அமீரகம் சென்றிருந்த சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா திடீரென்று இந்தியா திரும்பினார். சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதைத்தொடர்ந்தே அவர் அவசர அவசரமாகத் தாயகம் திரும்பியதாகத் தகவல் பரவன.
இதுபோல பரவிய செய்திகளை முற்றிலும் மறுத்து சுரேஷ் ரெய்னா, பஞ்சாப் மாநிலத்தில் தனது மாமா அசோக் குமாரை அடையாளம் தெரியாத சில நபர்கள் கொடூரமாகத் தாக்கியதில் உயிரிழந்ததாகவும் இந்தக் கடினமான நேரத்தில் குடும்பத்துடன் இருக்க விரும்பியே இந்தியா திரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்தில் கடும் காயமடைந்த அசோக் குமாரின் மகன் கவுசல் குமார், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி அவர் ஆகஸ்ட் 31ஆம் தேதி உயிரிழந்தார். அசோக் குமாரின் மனைவி ஆஷா ராணி தொடர்ந்து மருத்துவனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இது குறித்து விரைவாக விசாரணை நடத்தும்படி சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் உத்தரவிட்டார். இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், மூன்று நபர்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் பதான்கோட் ரயில் நிலையம் அருகே தங்கியுள்ளதாக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.