முப்படை தலைமைத் தளபதி (Chief of Defence Staff - சி.டி.எஸ்) என்ற பதவி உருவாக்கப்படுகிறது. நிர்வாகத்தின் உயர்பாதுகாப்பு கட்டமைப்பில் இப்பதவி முக்கிய பங்காற்றும் என்ற (டிசம்பர் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்ட) முடிவு எச்சரிக்கையுடன் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
இந்நடவடிக்கையை எடுத்ததற்காக மோடி அரசை பாராட்டும் அதேவேளை, முப்படை தலைமை தளபதி பதவியை உருவாக்கும் யோசனை 2001ஆம் ஆண்டிலேயே உருவான ஒன்று என்பதை நினைவூட்ட வேண்டும். இதில் உண்மையான சவால் என்பது இப்பதவிக்கு அதிகாரம் அளிக்கும் முறையையும் நியமனத்தையும் இந்தியாவின் ஆட்சிமுறைக்கு உட்பட்டு செய்யப்படுவதில் இருக்கிறது.
நாட்டு மக்களது உச்சபட்ச அமைப்புக்கு ராணுவ விவாகரங்கள் குறித்த ஆலோசனையை தர முப்படை தலைமைத் தளபதி பதவி முக்கிய பங்காற்றவுள்ளது. இதுபோன்று பல்வேறு விவகாரங்கள் பொதுதளத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. முப்படை தலைமைத் தளபதி பணி என்பது, ஒரு வானளாவிய அதிகாரம் கொண்டதாக எதிர்பார்க்கப்பட்டது. மேலும் தற்போதைய ராணுவத் தலைமை பதவிக்கு மேலானதாகவும் அதற்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்து வழங்கவும் சிலர் பரிந்துரை செய்திருந்தனர். இந்த பதவியால் இந்தியாவுடனான உறவில் நிகழவுள்ள மாற்றங்கள் குறித்து பல ஜனநாயக நாடுகள் மதிப்பாய்வு செய்துவருகின்றன.
எப்படியானாலும், இறுதியாக வெளிவந்திருப்பது இந்தியாவுக்கான மாதிரியாகும். இது தேசிய பாதுகாப்பு தொடர்பான மோடி அரசின் அணுகுமுறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. முப்படை தலைமைத் தளபதி குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை தெளிவாக கூறுவது என்னவென்றால், "அனைத்து முப்படை விவகாரங்களிலும் பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை ராணுவ ஆலோசகராக அவர் செயல்படுவார். முப்படை தளபதிகளும் தத்தமது துறை தொடர்பான பிரத்யேக விவகாரங்களில் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனைகளை தொடர்ந்து வழங்குவார். முப்படை தளபதிகள் உட்பட யாருக்கும் எந்த ராணுவ உத்தரவுகளையும், முப்படை தலைமைத் தளபதி பிறப்பிக்கமாட்டார். அரசியல் தலைமைக்கு சார்பற்ற ஆலோசனைகளை அவரால் வழங்க முடியும்".
எனவே, முப்படை தலைமைத் தளபதி என்பவர், பாதுகாப்புத்துறை அமைச்சரின் ‘முதன்மை ஆலோசகராக’ இருப்பாரே தவிர தலைமை ஆலோசகராக இருக்கமாட்டார். மேலும், முப்படை தலைமைத் தளபதி, இரண்டு பொறுப்புகளை கொண்டிருப்பார். ஒன்று, ராணுவ குழுக்களின் தலைவர். இரண்டாவது, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்படும் ராணுவ விவகாரங்கள் துறை (டி.எம்.ஏ.) தேவைப்பட்டால் அதன் செயலாளராக தலைவரே செயல்படுவார்.
முப்படை தலைமைத் தளபதிக்கான ஊதியம் முப்படை தளபதிகளுக்கு சமமான சம்பளம் மற்றும் சிறப்பதிகாரம் போலவே வழங்கப்படும். ஆனால், உயர் அதிகார படிநிலையில் பார்த்தால், முப்படை தளபதிகளைவிட உயர்ந்த அந்தஸ்தை அவர் கொண்டிருப்பார்.
ஆயுதக் கொள்முதலில் கூட்டாக செயல்படுதல், ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் சேவைகளுக்கான பயிற்சி, பணி நியமனம் மற்றும் அவற்றின் தேவைகளை ஒருங்கிணைத்தல், கூட்டு கட்டளைகளை நிறுவுதல் போன்ற செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம், வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துதல், ராணுவ உத்தரவுகளை மறுசீரமைக்கும் வசதி மற்றும் சேவைகளில் உள்நாட்டு உபகரணங்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தல் ஆகியவை முப்படை தலைமைத் தளபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களாக பார்க்கப்படுகிறது.