பாட்னா:பிகாரில் இடதுசாரி கட்சிகள் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது மேற்கு வங்கம் மாநிலத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பிகாரில் இடதுசாரி கட்சிகளான சிபிஐ, சிபிஐ (எம்எல்) மற்றும் சிபிஐ (எம்) ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்து வெற்றியை அறுவடை செய்தனர். வாக்கு வங்கியும் கடந்த காலங்களை விட கணிசமாக உயர்ந்துள்ளது.
காங்கிரஸ் போட்டியிட்ட 70 இடங்களில் 19 இடங்களை மட்டுமே வென்ற நிலையில், இடதுசாரிகள் போட்டியிட்ட 29 இடங்களில் 16 இடங்களில் வெற்றி பெற்றனர். இதேபோன்ற ஒரு வெற்றியை மேற்கு வங்காளத்திலும் பதிவு செய்யும் முனைப்பில் இடதுசாரிகள் உள்ளனர். இதனால் தங்களது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள மேற்கு வங்காளத்தில் மிகப்பெரிய அளவில் பரப்புரைகளுக்கு திட்டமிட்டுள்ளனர்.
இவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் கன்ஹையா குமார் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார். இது குறித்து சிபிஐஎம்எல் மாநில செயலாளர் குணால் கூறுகையில், “பிகாரைப் போலவே, வங்காளத்திலும் எங்கள் போராட்டம் பாஜகவுடன் மட்டுமே. எவ்வாறாயினும், கூட்டணி தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நாங்கள் மன உறுதியுடன் இருப்பதால், பிகாரை போன்று சிறப்பாக செயல்படுவோம்” என்றார்.
சிபிஐஎம் மத்திய குழு உறுப்பினர் அருண் மிஸ்ரா கூறுகையில், “வங்காளத்தில் எங்கள் போர் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டிற்கும் எதிராக இருக்கும், எங்கள் வாக்கு வங்கி மற்றவர்களை விட மிகச் சிறந்தது என்பதை நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். பிகார் மக்கள் இடது கட்சிகள் மீது நம்பிக்கை காட்டிய விதம், வங்காள மக்களும் அவ்வாறே செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். கடந்த சட்டப்பேரவை தேர்தலுடன் ஒப்பிடும்போது இந்த முறை நிச்சயமாக அதிக இடங்களுக்கு போட்டியிடுவோம். பிகாரின் வடிவத்தில் நாங்கள் வங்காளத்திலும் ஒரு பெரிய கூட்டணியை உருவாக்குவோம், இதனால் நாங்கள் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டையும் தோற்கடிக்க முடியும்” என்றார்.
இந்நிலையில், பிகாரை போன்று மேற்கு வங்கத்தில் வெற்றி பெறுவோம் கன்ஹையா குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
பிகாரைப் போலல்லாமல், மேற்கு வங்க மாநிலத்திலும் நான்கு இடதுசாரி கட்சிகள் உள்ளன. இந்தக் கட்சிகள் 2016 சட்டப்பேரவை தேர்தலில், 200-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டன. ஆனால் 32 இடங்களில் மட்டுமே வெற்றியைப் பெற்றன. அதிகபட்ச இடத்தை சிபிஐஎம் பெற்ற 25 இடங்களே அதிகப்பட்ச இடமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம் - மாஸ் காட்டும் மம்தா