நாடு முழுவதும் நாளை (ஜனவரி 26, 2020) 71ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் நாளை சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தின விழாவில் வேறு நாட்டுத் தலைவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பார்கள். கடந்த ஆண்டு, தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ராமபோசா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்தாண்டு நடைபெறும் விழாவில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார்.
இதனிடையே, நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று டெல்லி வந்தடைந்த போல்சனாரோ இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்திக்கவுள்ளார். மேலும் பல முக்கிய ஒப்பந்தங்களில் இவர் கையெழுத்திடப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம், வேளாண்மை உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து இரு தரப்பினரும் விவாதிக்கவுள்ளதாக இந்தியாவுக்கான பிரேசில் நாட்டு தூதர் தெரிவித்துள்ளார்.
இவ்விழாவில் கலந்துகொள்ள தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரள மாநிலங்களவை உறுப்பினரான பினோய் விஸ்வம்முக்கும் விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், விழாவில் பங்கேற்க மாட்டேன் என்று பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “மதவெறி, தன்பாலின ஈர்ப்பாளர்கள் வெறுப்பு ஆகிய பண்புகளைக் கொண்ட ஒரு தலைவரை (ஜெய்ர் போல்சனாரோ) குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பது வியப்பாக உள்ளது. உலகளவில் அவரின் நடவடிக்கைகள், குடியரசு தின விழாவில் நாம் கொண்டாடும் அரசியலமைப்பின் மாண்புக்கு முற்றிலும் எதிரானது. இரு மாதங்களுக்கும் மேலாக அமேசான் காடுகள் எரிந்து நாசமாகியதை கண்டுகொள்ளாமல் செயல்பட்ட பிரேசில் அதிபர் உலக சுற்றுச்சூழலுக்கு எண்ணற்ற சேதங்களை ஏற்படுத்தியுள்ளார்” என்று விஸ்வம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மற்றொன்றையும் நினைவுகூர விரும்புகிறேன். இந்திய கரும்பு விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணத்துக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் (WTO) தடைகோரியவர்தான் இந்த போல்சனாரோ. எனவே அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, குடியரசு தின விழா அழைப்பிதழை நான் நிராகரிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.