கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 200ஐ தாண்டியது. நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது. ஜெயபூரில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த இத்தாலியைச் சேர்ந்த நபர் குணம் அடைந்து விட்டதாக முன்பு கூறப்பட்டது. ஆனால், பின்னர் அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
உலகளவில் இந்த நோய்த்தொற்று காரணமாக இறந்தோர் எண்ணிக்கை 10,000ஆகவும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சமாகவும் இருந்தது. சக்திவாய்ந்த இந்த வைரஸின் அதிவேகப் பரவலால் ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருமுறை பாதிக்கப்பட்டோர், இறந்தோர் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது.
மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைவுதான் என்று அசட்டுத்தனமாக நமக்கு நாமே திருப்தியடையக் கூடாது. கரோனா அறிகுறிகள் உள்ளவர்களைத் தனிமைப்படுத்தாவிட்டால், வைரஸின் பரவல் விகிதம் அதிகரிக்கும். இதனால் இந்தியாவிலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகரிக்கும்.
இதனைக் கருத்தில் கொண்டு தான் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த வியாழக்கிழமை (மார்ச் 19) நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, சுய ஒழுக்கம் பேண வேண்டும் என்று கூறி ’மக்கள் ஊரடங்கு’ உத்தரவைப் பின்பற்ற அழைப்பு விடுத்தார். மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் அவர் விளக்கமளித்தார்.
அதே சமயத்தில் இன்னும் சில தனிமைப்படுத்தப்படும் மையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன. இத்தகைய அசாதாரண சூழலில் தான் இந்திய ராணுவப் படைகள் அமைதியாகவும், பாராட்டத்தக்க வகையிலும் செயல்படுகின்றன. கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தும் மையம் அண்மையில் விசாகப்பட்டினத்தில் அமைக்கப்பட்டது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும்.
இதற்கு முன்பு, நான்கு மையங்கள் ஏற்கனவே இயங்கி வருகின்றன. ஜெய் சால்மார், மானேசார் (அரியானா), ஆகிய மையங்களை ராணுவமும், மும்பை (கடற்படை), ஹிண்டான் (விமானப்படை) ஆகிய மையங்களை முறையே கடற்படையும் விமானப் படையும் நிர்வகிக்கின்றன.
பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்ததிலிருந்து மேலும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. இவை அனைத்தும் 48 மணி நேரம் முதல் 72 மணி நேரத்துக்குள் செயல்பாட்டுக்கு வரும். ஜோத்பூர், கொல்கத்தா, சென்னை (ராணுவம்), திண்டுக்கல், பெங்களூரு, கான்பூர், ஜோர்காட், கோராக்பூர் (விமானப் படை), கொச்சி (கடற்படை) ஆகிய மையங்களும் தற்போது இந்த வரிசையில் இணைந்துள்ளன.
இந்தத் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் உலக சுகாதார நிறுவனம் கூறிய வழிகாட்டல்களுக்கு ஏற்ப உருவாக்கப்படுகின்றன. இது தொடர்பான வழிமுறைகளுக்கேற்ப, எங்கு ராணுவப் படைகளுக்கு தேவையான வசதிகள் இருக்கிறதோ, போதுமான இடவசதி இருக்கிறதோ அந்த நகரங்களில் ராணுவ தனிமைப்படுத்தப்படும் மையங்கள் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மையங்களில் பணியாற்றக்கூடிய மருத்துவ வல்லுநர்களுக்கு, சிக்கலான சவாலை எதிர்கொள்வதற்காகப் பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்தச் சவால் இந்தியாவுக்கு மிகவும் சிக்கலான ஒன்றாகும். ஏனெனில், கடந்த காலங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்களைத் தனிமைப்படுத்தி ராணுவத்தினரின் கண்காணிப்பில் வைக்கும் இத்தகைய அவசர சூழலை இதுவரை இந்தியா கண்டதில்லை. தொற்று பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பொதுமக்களில் சிலர் தனிமைப்படுத்தலே தவிர்க்கவே நினைக்கின்றனர். இதனால் இவ்விவகாரத்தில் உள்ளூர் காவல் துறையினர் தலையிட வேண்டிய சூழல் உருவாகிறது.
இவையனைத்தும் ஆரம்பக்கட்ட நாள்களில் தான் இருந்தன. கரோனா பரவலின் மூன்றாம் கட்டத்தில் (இத்தாலி, ஸ்பெயின், ஈரான் நாடுகளில் நிலவும் சூழல் போல) மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் இந்தியாவின் பரந்த மக்கள்தொகை அளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும்.