பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் (ஐசிஎம்ஆர்) இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை மூன்றாம் கட்ட சோதனையில், ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தன்னார்வலராக போட்டுக்கொண்டார். இதற்கிடையே, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில், அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசி: ஹரியானா அமைச்சரின் உடல்நிலை மோசம்
சண்டிகர்: தன்னார்வலராக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா அமைச்சர் அனில் விஜ்ஜின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ”பிஜிஐஎம்எஸ் மருத்துவமனை இயக்குநர் ரோதஸ் யாதாவால் அமைக்கப்பட்ட மூத்த மருத்துவர்கள் கொண்ட குழு அனில் விஜ்ஜூக்கு சிகிச்சை அளித்துவருகிறது. அவரின் உடலில் கரோனாவின் தாக்கம் மிதமாகவே உள்ளது என மருத்துவர்கள் கருதுகின்றனர். நிமோனியாவாலும் பாதிக்கப்பட்டுள்ளார். வழங்கப்பட்ட பல்வேறு ஆலோசனைகளை விவாதித்துவருகிறோம்.
இன்று மாலை அனில் விஜ்ஜூக்கு மேலும் ஒரு யூனிட் பிளாஸ்மா வழங்க முடிவெடுத்துள்ளோம். முன்னதாக அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடரவுள்ளன. உடல்நிலை மோசமடைந்தது குறித்து அவரிடமே (விஜ்) தெரிவித்துள்ளோம். பல்வேறு சிகிச்சை முறைகளின் நன்மை, தீமைகள் குறித்தும் அவரிடம் ஆலோசித்தோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.