கோவிட் 19 நோய்த்தொற்று காலத்தில் பல்வேறு துறைகளுடன் சேர்ந்து கல்வித் துறையும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் (87%) பத்துக்கு ஒன்பது மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக, யுனெஸ்கோ கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக உலகம் முழுக்க 154 கோடி மாணவர்களது கல்வி, இந்த நோய்த்தொற்று காலத்தில் கேள்விக்குறியாகியுள்ளதாக கூறப்படுகிறது. கல்வி மையங்கள் மூடப்பட்டுள்ளதால் பெண்குழந்தைகள் தொடர்ந்து படிக்க இயலாத சூழலும் அதிகரித்துள்ளது, இதனால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்தியாவில் மட்டும் பொருளாதார சிக்கல்கள் மற்றும் சமூக சிக்கல்கள் தற்போதுள்ள சூழலில் அதிகரித்திருப்பதால், 32 கோடிக்கும் அதிகமான மாணவர்களின் கல்வி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும், ஆன்லைன் கல்வி முறை ஏராளமான மாணவர்கள் மற்றும் கல்வி நிலையங்களின் எதிர்காலத்தை காப்பாற்றியுள்ளது என்று தான் கூறவேண்டும். இந்த கல்வியாண்டு முழுவதும் மாணவர்களின் படிப்பு வீணாவதைத் தடுத்து, ஆன்லைன் மூலம் தொடர்ந்து கல்வியை அளிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. பள்ளிகள் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை, அனைத்து நிலைகளிலும் உள்ள கல்வி நிலையங்கள் முழுமூச்சாக முன்வந்து சிபிஎஸ்இ, யுஜிசி, ஏஐசிடிஇ ஆகியவற்றின் வழிகாட்டுதல்களோடு, இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை பயிற்றுவிக்கின்றன. மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர் மற்றும் நம் அனைவரிடமும் ஆன்லைன் கல்வி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் அதே வேளையில், இந்த கல்வி முறை அனைவருக்கும் சாத்தியமாகியிருக்கிறதா, திறம்பட பயிற்றுவிக்க முடிகிறதா என்ற கேள்வியும் விவாதமும் எழாமல் இல்லை.
கட்டுக்கதைகளும் உண்மையும்!
குறிப்பிட்ட எல்லைகளைத் தாண்டி, குறைந்த செலவினத்தில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கிடையில் உள்ள இடைவெளியைக் குறைத்து, கற்றலில் புதிய பரிமாணத்தை இந்த ஆன்லைன் கல்வி ஏற்படுத்தி வருகிறது. அதே நேரம் இதுகுறித்த கட்டுக்கதைகளும் தவறான தகவல்களும் பரவி வருகின்றன.
பொதுமுடக்கம் ஆரம்பக்கட்டத்தில் இருந்த போது ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்ட நேரத்தில், இந்த வகுப்பு முறை தற்காலிகமானது என்றும், விரைவில் இந்த முறை மாற்றப்படும் என்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் எண்ணினர். ஆனால், ஏற்கனவே மாபெரும் திறந்தநிலை ஆன்லைன் வகுப்புகள் திட்டத்தின் கீழ் ஸ்வயம் என்ற வடிவில், ஆன்லைன் வகுப்புகள் நம் நாட்டில் பரவலாக்கப்பட்டு விட்டன. இதன் மூலம் பள்ளிக் கல்வியில் தொடங்கி , தொழிற்கல்வி மையங்கள், இளங்கலை, முதுகலை, பொறியியல் மற்றும் நிபுணத்துவ கல்விக்கான மின் கற்றல் தளம் வழியாக அனைவரும் இலவசமாக கற்கக்கூடிய பாதை ஏற்கனவே வகுக்கப்பட்டு விட்டது. ஏராளமான பயிற்சி மையங்களும் மாணவர்களும் இந்த மின்கற்றல் தளத்திற்கு தயாராகி விட்டனர். இந்த கொரோனா காலத்தில், மின் கற்றலுடன் அதிக இடைவெளியைக் கொண்டிருந்த கல்வி மையங்களும் மாணவர்களும் கூட, அந்த இடைவெளியைத் தாண்டி ஆன்லைன் கல்வி தளத்திற்குள் நுழைந்துள்ளனர். ஆனாலும் தொழில்நுட்பங்களுக்கு அறிமுகம் அல்லாத ஆசிரியர்கள் இந்த ஆன்லைன் வகுப்புகள் மீது வெறுப்பு கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதில் வயது ஒரு தடையே அல்ல என்பதுதான் உண்மை. இதற்கு ஆர்வம் இருந்தால் போதும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. தொழில்நுட்பங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டதோடு மட்டுமின்றி, ஏராளமான ஆசிரியர்களுக்கு புதிதாக பயமும் தொற்றிக்கொண்டுள்ளது. மாணவர்களையும் ஆசிரியர்களையும் மையப்படுத்தும் இந்த ஆன்லைன் கல்வியால், பாரம்பரிய முறைப்படி கல்வி புகட்டும் தங்களது வேலைவாய்ப்பு பறிக்கப்படுமா என்று அஞ்சுகின்றனர்! ஆயினும், மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தொழில்நுட்பப் பாதையில் பயணிக்கத் தயாராகும் கல்வி மையங்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பான வரவேற்பை மின் கற்றல் தளமானது அளிக்கிறது. இதற்கு, பழைய ’கரும்பலகை’ கற்பித்தல் முறையைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான மனநிலையை அவர்கள் உருவாக்க வேண்டும்.
மின்கற்றல் முறையில் ஆசிரியர்களின் பங்கு குறைவு என்பது கட்டுக்கதை. இன்னும் சொல்லப்போனால் ஆன்லைன் கல்வி முறையில் ஆசிரியர்களின் பங்கு மிக அதிகமாக தேவைப்படுகிறது. பயிற்றுவித்தல் மட்டுமின்றி ஆன்லைன் பாடத்திட்டத்தை வடிவமைத்தல், உள்ளடக்கத்தை உருவாக்குதல், தொழில்நுட்பங்களின் உதவியால் மாணவர்களுக்கு அறிவைப் புகட்டுதல் ஆகிய பல்வேறு பணிகளுக்கு ஆசிரியர்களின் பங்கு முன்பை விட மிக அதிகம் என்பதை மறுக்க இயலாது.
சவால்களை தகர்த்தெறிதல்
தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டு மின்கற்றல் முறைக்கு மாறுவதில் பல சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக பல்வேறு விதமான கல்வி நடைமுறைகள், மேலாண்மை அமைப்புகளைக் கொண்ட இந்திய கல்வி அமைப்பில் (5 லட்சம் பள்ளிகள், 50,000 உயர்கல்வி மையங்கள்), வெவ்வேறு பின்புலங்களைக் கொண்ட மாணவர்களுக்கு மின் கற்றல் தளத்தை முழுமையாக செயல்படுத்துவது சவாலான காரியம் தான்.