சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து பரவிய கரோனா தீநுண்மி (வைரஸ்) தொற்று உலகளாவிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் 45 லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக வல்லரசு நாடான அமெரிக்கா இந்தக் கரோனா தொற்றால் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான சேவைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவிட்-19 தொற்றுநோய் வெளிநாடுகளில் படிக்க விரும்பும் 48 விழுக்காடு இந்திய மாணவர்களின் முடிவை பாதித்துள்ளது என குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19க்குப் பிந்தைய உலகில் வேலைவாய்ப்புகள் மிகவும் குறைய வாய்ப்புகள் உள்ளதால், சர்வதேச உயர் கல்வி முதலீட்டில் கணிசமான அளவு வருவாய் குறைய வாய்ப்புள்ளதாக குவாக்கரெல்லி சைமண்ட்ஸின் (QS) வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், "சமீபத்திய காலங்களில் வெளிநாட்டில் படிக்க விரும்பிய 48.46 முதுகலை மாணவர்களின் முடிவை கோவிட்-19 பாதித்துள்ளதாகக் கண்டறிந்துள்ளோம். இருப்பினும், இந்தியாவுக்கு வெளியே உயர் கல்வியைத் தொடர்வதை மறுபரிசீலனை செய்த STEM (Science, Technology, Engineering, Maths) அல்லாத மாணவர்களில் ஒரு பெரிய விகிதம் இருக்கிறது.